×

ஏற்காடு, நீலகிரி மலையும் எரிகிறது : கொடைக்கானல் நகரில் காட்டுத்தீ

கொடைக்கானல்:  கொடைக்கானல் நகர் பகுதியில் பரவிய காட்டுத்தீயால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே பேத்துப்பாறை மற்றும் நாயுடுபுரம், சின்னப்பள்ளம், பாத்திமா மலை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. நேற்று முன்தினம் வனத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பல ஏக்கர் அரிய மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில் நேற்று காலை நட்சத்திர ஏரியில் இருந்து 5 கிமீ தொலைவில், நாயுடுபுரம் அருகே பாக்கியபுரத்தில் திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென பரவி அருகிலுள்ள தனியார் விடுதிகள், ஓட்டல் பகுதிகளில் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாகி சுற்றுலாப்பயணிகள், குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஒருபுறம் அணைக்கும்போது மறுபுறம் பரவுவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சுற்றுலாப்பயணிகள், குடியிருப்பு வாசிகள் வெளியே வர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் கொடைக்கானல் எம்எம் தெரு பின்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வீடுகளுக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.  கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருவதால் கொடைக்கானல் மலையடிவாரம் மற்றும் நகர் பகுதி மக்கள், சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்காட்டிலும் தீ: சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில், 60 அடி பாலம் பகுதியில் மர்மநபர்கள், சாலையோரம் தேங்கி கிடந்த சருகு மீது தீ வைத்துள்ளனர். இது காற்றில் பரவி, அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் போராடி ேநற்று காலை தீயை அணைத்தனர். இதனிடையே நேற்று மதியம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பின்புற பகுதியில் காட்டு தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்தனர்.

நீலகிரியிலும் தீ: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.  இப்பகுதியில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச்சரகம், தெப்பக்காடு கார்குடி இடையே மதியம் 2 மணியளவில் காட்டுத் தீ பரவியது. தீயை அணைக்கும் பணியில் தமிழக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் புகை மூட்டம் பரவியதால் இரு மாநில போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yeragiri Mountain ,Kodaikanal , Kodaikanal, wildfire, and suffocation
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...