×

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு மத்திய அரசின் ஆய்வுக்குழு விசாரணை

கோவை: தமிழகத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் நிதி முறையாக செலவிடப்பட்டதா என கண்டறிய மத்திய அரசின் குழு விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறையின் நிதி உதவியுடன் ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தில் வீடு கட்டி  வழங்கப்படுகிறது. மாநில அளவில் இந்த திட்டத்தில் கோவை மாவட்டம் முன்னோடியாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டில், இந்த திட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது, அமுதம் நகரில் 1,504 வீடுகள் 107.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதேபகுதியில், மற்றொரு இரண்டாவது திட்டத்தில் 992 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. சூலூரில் 528 வீடுகள், பேரூரில் 288  வீடுகள், பிள்ளையார்புரத்தில் இரு திட்டத்தில் 400 வீடுகள், வடவள்ளியில் 29.36 கோடி ரூபாய் செலவில் 432 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. மதுரையில் சுமார் 3 ஆயிரம் வீடுகள், ஈரோட்டில் சுமார் 2 ஆயிரம் வீடுகள்  கட்டப்பட்டு வருகிறது. மாநில அளவில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நடப்பாண்டில் கட்டப்பட்டு, பயனாளிகள் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வீடு கட்ட, குளோபல் டெண்டர் முறை பின்பற்றப்படுகிறது. டெண்டர் வெளியீடு, இறுதி செய்தல், பணிகளை ஒதுக்கீடு செய்தல், பணிகளை நடத்துதல், பில் வழங்குதல் போன்றவற்றில் விதிமுறை மீறல்  இருப்பதாக பரவலாக புகார் எழுந்தது. மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழக குடிசை மாற்று வாரியத்தினர் விதிமுறை மீறி வீணாக்கி வருவதாகவும், முறைகேடு செய்வதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  விசாரணை நடத்துவதற்காக, மத்திய வீட்டு வசதி வாரியம் மற்றும் வறுமை ஒழிப்பு துறையின் மேற்பார்வையில் மூன்றாம் நபர் தர மேலாண்மை குழு (தேர்ட் பார்ட்டி குவாலிட்டி மேனேஜ்மெண்ட் ஏஜன்சி) உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்தியாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு அடுக்குமாடி பில்டர்களும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர்.  அஸ்திவாரம் முதல் கான்கிரீட் தளம் வரை மற்றும் சிமெண்ட் பூச்சி, கம்பிகளின் தரம், ெசங்கல், ஹாலோ பிளாக் தரம், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் தரத்தை பல்வேறு கட்டமாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

அதன்படி, கோவை கீரணத்தம், அண்ணாநகர், மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளின் சுவர் மற்றும் கான்கிரீட் தளம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், கட்டுமான பணிகள்  நடக்கும்போது 4 கட்டமாக சோதனை நடத்தப்பட்டு, ஆய்வு மாதிரிகள் எடுக்கப்படுகிறது. தரம் குறைவாக இருந்தால் அந்த கட்டடத்திற்கான பில் தொகையை நிறுத்திவைக்க உத்தரவிடப்படுகிறது. குறைபாடு சரிசெய்த பின்னரே  பில் தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தர மேலாண்மை ஏஜன்சியினர் கூறுகையில், ‘‘முறைகேடு நடக்காமல் தடுக்க நாங்கள் ஆய்வுசெய்து வருகிறோம். மணல், சிமெண்ட் கலவை பூச்சு உரிய அளவீட்டில் இல்லாவிட்டால் மீண்டும் பூச்சு பணி நடத்த  அறிவுறுத்துகிறோம். தர குறைபாடு சரி செய்த பின்னரே பில் தொகை வழங்க ஒப்புதல் தருகிறோம்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Investigation ,investigations ,government , Everyone's ,house project,federal government, Investigative investigation
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...