×

மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் தைலாபுரம் விருந்தில் பாஜவை புறக்கணித்த பாமக: வருத்தத்தில் டெல்லி தலைவர்கள்

சென்னை: மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தைலாபுரத்தில் நடந்த விருந்துக்கு பாஜகவை பாமக அழைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. கடந்த 7 ஆண்டுகளாக, ஜெயலலிதாவையும், அமைச்சர்களையும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனால் இரு கட்சிகளின்  தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் எதிராக பார்க்கும் சூழ்நிலையில்தான் இருந்தனர். இந்தநிலையில், கடந்த 3 மாதமாக அன்புமணி, அதிமுக மீது தாக்குதல் தொடுக்காமல் இருந்தார். ராமதாசோ, அதிமுக தலைவர்களுக்கு ஆதரவாக அறிக்கை அளித்து வந்தார்.இதனால் அவர் அதிமுக பக்கம் போவார் என்று  கூறப்பட்டு வந்தது. எதிர்பார்த்ததுபோலவே அதிமுக அணியில் பாமக சேர்ந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக 7 சீட்டும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் வழங்கப்பட்டது. அதேநேரத்தில் பாஜவுக்கு வெறும் 5 சீட்டுகள்தான் வழங்கப்பட்டன. இதனால் பாஜக  தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்தநிலையில் அதிமுக தலைவர்களுக்கு பாமக நிறுவனர் தனது தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விருந்தளித்தார்.

இந்த விருந்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வட மாவட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாஜ தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அந்தக் கட்சியின் தலைவர்களை  அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரே கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை மட்டும் அழைத்து, தங்களை புறக்கணித்துள்ளது, தங்களுக்கு வட மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்பதால்தான் புறக்கணித்துள்ளனர் என்று  ஆதங்கப்படுகின்றனர். ஆனால் பாமகவினரோ, வட மாவட்டங்களில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லை. தொகுதிக்கு 500 பேர் கூட கிடையாது. மேலும், அவர்கள் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. இந்தநிலையில், பாஜவினருடன்  சேர்ந்து சுற்றினால் விழுகிற ஓட்டும் விழாது என்பதால்தான் அவர்களை புறக்கணித்தோம். மேலும் நாங்கள் அதிமுகவுடன்தான் கூட்டு. பாஜவுடன் கூட்டு கிடையாது.

கடந்த முறை நாங்கள் பாஜவுடன் கூட்டு வைத்தோம். ஆனால் மத்திய அமைச்சரவையில் ஒரு எம்பியாக இருந்த ராம்தாஸ் அத்வாலேவுக்கு இடம் அளித்தனர். அன்புமணியை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த முறை பாஜ  எங்களுக்கு தேவையில்லை. அதிமுக போதும் என்ற நிலையில்தான் உள்ளோம் என்றனர்.பாமகவின் இந்த புறக்கணிப்பால், டெல்லி பாஜ தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பாஜ தலைவர்கள் வட மாவட்டங்களில் சீட் வாங்காமல் தென் மாவட்டம் அல்லது மேற்கு மாவட்டங்களில் சீட் வேண்டும்  என்று அதிமுக தலைவர்களிடம் கேட்டு வருகின்றனர்.விருந்துக்கு அழைக்காமல், பாஜ தலைவர்களை பாமக புறக்கணித்தது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,Tilalpur Dinner ,Bhajan , Because , turmoil, Thaalapuram
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...