×

திருமண பதிவுக்கு மணமக்கள் வரவேண்டிய அவசியம் இல்லை: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திருமண பதிவுக்காக மணமக்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான உரிய காரணங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் போதும்  என்று பதிவுத்துறை  கூடுதல் ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் கடந்த 2009ல் இருந்து திருமணம் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது.  இதற்காக, திருமணம் நடத்தி வைத்தவர்கள், மணமக்கள் கையொப்பத்துடன்  திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிடம், வயது உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  மேலும், ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் மணமக்கள் வந்தால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்கின்றனர்.  இதனால், 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய முடியாத நிலை  ஏற்படுகிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சீமா மற்றும் அஸ்வினி குமார் தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி மணமக்கள் வராவிட்டாலும், உரிய ஆவணங்கள் இருந்தால் திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக, பதிவுத்துறை கூடுதல் ஐஜி சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாடு திருமண பதிவு விதிகளின் படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களில் சந்தேகம் ஏற்படின் மணமக்களுக்கு வாய்ப்பளித்து இரண்டு தரப்பையும்  அழைத்து விசாரணைக்கு பின் சார்பதிவாளர் திருப்தி அடையாவிட்டால் அந்த திருமண பதிவுகளை மறுக்கலாம். திருமண பதிவுக்கு மணமக்கள் கட்டாயம் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் எதற்காக வர முடியவில்லை என்ற காரணத்தையும், அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள், அளிக்கும் பதிலில்  சார்பதிவாளர்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகு பத்திரம் பதிவு செய்யலாம்.இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மதம் அடிப்படையில் திருமணம் நடைபெற்றாலும், அங்கு திருமணம் நடந்ததற்கான ஆவணங்களை திருமண பதிவின் போது தாக்கல் செய்ய வேண்டும். வர முடியாவிட்டால் உரிய ஆவணங்களை  சமர்பிக்க வேண்டும். திருமணம் நடந்ததை உறுதிப்படுத்த வேண்டும்.
திருமணம் பதிவு செய்ய சார்பதிவாளர்கள் மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை சார்பதிவாளர்கள் ெதரிவிக்க வேண்டும். திருமண பதிவு சட்டம் 2009ன் படி நடைமுறை பின்பற்றாமல் பதிவு செய்யும் பட்சத்தில்  சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bride , bride, wedding record,, registry order
× RELATED மணப்பெண் மாயம்