×

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்...முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதத்தில் இருக்க போவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த 21-ம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். அதில், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் எப்படி மோடி அரசு அநீதி இழைத்துள்ளது என்பதை வீடு வீடாக சென்று ஆம் ஆத்மியினர் கூறுவார்கள். பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதி அளித்தப்படி, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தர வேண்டும். அருணாச்சல மாநில மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரதமர் மோடி டெல்லிக்கு ஏன் தர மறுக்கிறார். சார், டெல்லியும் முழு மாநில அந்தஸ்துக்காக காத்திருக்கிறது. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தருவேன் என நீங்கள் உறுதிமொழி கொடுத்தீர்கள். கடந்த 70 ஆண்டுகளாக டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்தியில் பதிந்துள்ள மற்றொரு பதிவில், பிரதமர் ஆவதற்கு முன்ப முழு மாநில அந்தஸ்து பிரச்னையை மோடி எழுப்பினார். ஆனால் இன்று அவர் பிரதமர். டெல்லி மக்கள் இதை நிறைவேற்ற வேண்டும் என அவருக்கு நினைவூட்ட விரும்புகிறார்கள்.  

மக்களவை தேர்தலுக்கு இதுதான் எங்களது முக்கிய கோரிக்கையாகும். இதற்காக பாஜவின் இந்த உறுதிமொழி இடம் பெற்றுள்ள தேர்தல் அறிக்கையை ஏஏபி தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பார்கள். இது காவி கட்சிக்கு அதன் முந்தைய உறுதிமொழியை நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாணவரணியான, சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதியினர் இந்த பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேசிய தலைநகரில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்டவை மத்திய அரசிடமே இருக்கும் என கூறியுள்ளது. மற்றொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை அளித்த காரணத்தால் இது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகு ஆம் ஆத்மி முழு மாநில் அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகம் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் டெல்லி அல்ல. பொது வாக்குகள் மற்றும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறது, ஆனால் அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : retirement ,Delhi ,Arvind Kejriwal , Delhi, state status, serial hunger strike, chief minister Arvind Kejriwal
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக...