×

கோமுகி அணை வறண்டதால் நீர்பிடிப்பு பகுதியில் கம்பு, வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சின்னசேலம் : கோமுகி அணை வறண்டு போனதால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கம்பு, எள், வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது.

இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் ஒரு பகுதியை கச்சிராயபாளையம், வடக்கநந்தல் ஏரிகளுக்கும், மற்றொரு கால்வாயின் மூலம் கடத்தூர், தெங்கியாநத்தம், நல்லாத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் செல்கிறது. இதன்மூலம் கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின் போதும், கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக அக்டோர் மாதம் திறந்து விடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாவட்ட ஆட்சியரால் அணையில் இருந்து ஆறு மற்றும் பாசன கால்வாயில் நீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு போதிய அளவு பருவமழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் கடந்த மாதத்திலேயே அணையில் நீர் வடிந்து விட்டது. இதனால் கோமுகி அணையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் தட்டுத்தடுமாறி நெல் அறுவடை செய்து வருகின்றனர்.

கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவை கொண்டதாக இருக்கும். தற்போது அணை வறண்டு போனதால் பொட்டியம், மல்லியம்பாடி, கோட்டக்கரை, பரிகம், வடக்கநந்தல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அணையின் நீர்பிடிப்பு பகுதியை உழுது கம்பு, சோளம், எள், வெள்ளரி போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

இந்த பயிர்கள் அணையின் நீர்பிடிப்பு ஈரப்பதத்தை கொண்டு வளர்ந்து விடும். இந்த அணையில் விளையும் வெள்ளரி பழங்களை சேலம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மினிவேன்களில் வந்து வாங்கி சென்று விற்று பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water area , Gomuki dam , chinnasalem,Millet,cucumber
× RELATED காவிரி நதிநீர் ஒழுங்காற்று...