×

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3 விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், ஒரு கிலோ ரூ.3ஆக சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதை தொடர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில்  மார்ச் மாதம் வரை வெயிலின் தாக்கத்தால், தக்காளி சாகுபடி மிகவும் குறைந்தது. இதனால், பல மாதமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததுடன், அவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

 பின், மே மாதம் கோடை மழைக்கு பிறகு, ஜூன் மாதத்திலிருந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் தக்காளி சாகுபடி செய்வதை தொடர்ந்தனர்.இதில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு நன்கு விளைச்சலடைந்த தக்காளிகளின் அறுவடை தீவிரமாக இருந்தது.
 இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.15ஆக குறைந்தது.

 இந்நிலையில் கடந்த சிலவாரமாக, சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி உடுமலை, கணியூர், தளி, மடத்துக்குளம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தக்காளி வரத்து அதிகரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  இதில் நேற்று காந்தி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து வழக்கத்தை விட அதிகளவு தக்காளி வந்திருந்தது. இதனால், தக்காளின் விலை மிகவும் சரிந்தது.

இதில் சுமார் 15 கிலோஎடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.40 முதல் அதிக பட்சமாக ரூ.85 வரையிலே ஏலம்போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.6க்கு என மிகவும் குறைவான விலைக்கு ஏலம்போனது. அதனை பெரும்பாலும், கேரள வியாபாரிகளே வாங்கி சென்றனர். இருப்பினும், தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Tomato , Farmers, Tomato price
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...