×

விமான பயணிகளிடம் மோடி ஆதரவு பிரசாரம் : அமைச்சர் உத்தரவு ... கலக்கத்தில் விமான நிறுவனங்கள்

புதுடெல்லி:  மோடி அரசின் சாதனைகள் குறித்து விமான பயணிகளிடம் பிரசாரம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசு தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய விமான போக்குவரத்து துறை அனைத்து விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை கடந்த 20ம் தேதி அனுப்பியுள்ளது. அத்துடன் அமைச்சர் சுரேஷ் பிரபுவின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.அதில், இந்தியாவில் பயன்படுத்தப்படாத விமான நிலையங்களில் பலவற்றை மோடி அரசு உடான் திட்டத்தின் கிழ் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகிலேயே இந்தியாதான் விமான போக்குவரத்து துறையில் வேகமாக முன்னேறும் நாடாக திகழ்கிறது என்றும்,  பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் எண்ணிக்கை 100, மேலும் 6 விமான நிலையங்கள் தனியார்மயம் என்று மோடி அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சரின் இந்த கடிதத்தை ஒவ்வொரு விமான நிறுவனமும், தங்கள் பயணிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. எத்தனை பயணிகளுக்கு அமைச்சரின் கடித நகல் அனுப்பி வைக்கப்பட்டது என்ற விவரத்தையும் தினமும் தாக்கல் செய்ய விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பிரசார கடிதத்தை அனுப்புவதை தங்கள் பயணிகள் விரும்ப மாட்டார்கள் என்பதால் விமான நிறுவனங்கள் தர்ம சங்கடத்தில் உள்ளன. அதே நேரத்தில் மத்திய அரசின் உத்தரவை மதிக்காவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும்  என்ற அச்சத்தில் விமான நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,air travelers ,Minister , Modi's achievements, airports, air companies
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...