×

தண்ணீர் பிரச்னை தலைதூக்கி உள்ள நிலையில் ஆரணி ஆற்றில் மீண்டும் மணல் குவாரி

* விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி
* நிலத்தடி நீர் குறையும் அபாயம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னை தலைதூக்கி உள்ள நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மேலும், குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் என பொதுக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதி ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி தொடங்க அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள், மகளிர் குழு பெண்கள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடையடைப்பு, சாலை மறியல், மனித சங்கிலி என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் இந்த போராட்டங்களை எல்லாம் மீறி கடந்த ஆண்டு ஜூன்  1ம் தேதி முதல் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி தொடங்கி நடந்து வந்தது.

மணல் குவாரி தொடங்கி ஒரு மாதத்திலேயே  ஊத்துக்கோட்டை,  அனந்தேரி, சிட்ரபாக்கம் மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சினால் பம்ப் செட்டுகளில் தண்ணீரின் அளவு பைப்பின் அளவில் பாதியாகத்தான் வருகிறது. மேலும் நிலத்தடி நீர் குறைந்து அவ்வப்போது குடிநீர் பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மணல் குவாரிக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மணல் குவாரியை ஆய்வு செய்ய மணல் குவாரி திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் தலைமையில் பேராசிரியர்கள் மோகன், கணபதி வெங்கடசுப்பிரமணியன், டாக்டர் புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவை நியமனம் செய்தது.

இந்த குழுவினர்  கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். உயர்நீதி மன்ற குழுவினர் குவாரி நடந்த இடத்திற்கு சென்று மணல் எடுக்கப்பட்ட இடங்களை அளவீடு செய்தனர். பின்னர் விவசாய கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீரின் வேக அளவையும் கணக்கீடு செய்து, இதுகுறித்த ஆய்வு அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்காக ஏற்கனவே இருந்த வழித்தடம் அமைந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால்,  மீண்டும்  மணல் குவாரி தொடங்க நேற்று முன்தினம்  முதல் வேறுபாதையில் புதிய வழித்தடம்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இங்கு, மணல் குவாரி இல்லை என்ற சந்தோஷத்தில் இருந்த மக்களுக்கு மீண்டும் அரசு மணல் குவாரி தொடங்கியதால்   ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் எடுப்பதற்காக ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் ஆற்றின் கரை ஓரத்தில் 20 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில்  ஏற்கனவே மணல் எடுத்ததால் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை போதுமான அளவு மழை இல்லாத  நிலையில் தற்போது மீண்டும் மணல் எடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் குடிநீர் பஞ்சம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது. எங்கள்  பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஆரணியாறு மட்டும் தான். இந்த  ஆற்றில் இருந்து தான் ஊத்துக்கோட்டை பகுதி முழுவதும் பேரூராட்சி மூலம்  குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆற்றையொட்டி 100க்கணக்கான  ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு ஆகிய பயிர் செய்கிறோம். எனவே  எங்கள் ஊருக்கு மணல் குவாரி தேவையில்லை’’ என்றனர்.

அரசு பணிகள் முடங்கியதால் மணல் எடுப்பு
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’அரசு மணல் குவாரியை தனியார் யாருக்கும் ஒப்படைக்கவில்லை. அரசு பணிகள் முடங்கி கிடப்பதால் மணல் எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  தற்போது மணலை எடுத்து குருபுரம் பகுதியில் உள்ள மணல் கிடங்கில் கொட்ட சொல்லி உத்தரவு வந்துள்ளது. தற்காலிகமாக  விற்பனை கிடையாது’’  என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : river ,Arany , Water problem, Aryan river, sand quarry
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...