×

பழங்குடி இன மக்களின் உரிமை காக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள், வாழ்ந்து வந்த வனப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வனஉரிமைகள் சட்டம் 2006ன்படி பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் சுமார் 43 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 19 லட்சம் பேர் மட்டுமே வனப்பகுதியில் குடியிருக்க உரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 24 லட்சம் பழங்குடியினர் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தமது வனப்பகுதிகளை விட்டு விரட்டப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து விரட்ட வேண்டும். அங்குள்ள இயற்கை வளங்களை சுரண்ட வேண்டும் என திட்டமிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் சதிசெய்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவுவதாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது. பழங்குடியினர் யார் என்பதை உறுதிசெய்ய வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராம சபைகள் நிறைவேற்றும் தீர்மானத்தையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறியுள்ளது.

அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறக்கணித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் சுமார் 10,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும், அதற்கு தமிழக அரசும் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumavalavan , Tribal people are the right, the Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு