×

திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி எஸ்.ஐ. வீட்டு முன் கர்ப்பிணி தர்ணா

பாலக்கோடு : காதல் திருமணம் செய்து, கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய போலீஸ் எஸ்ஐயுடன் சேர்த்து வைக்கக்கோரி, பாலக்கோடு காவலர் குடியிருப்பு முன்பு,நிறைமாத கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை 5.30 மணியளவில், நிறைமாத கர்ப்பிணியான சத்யா(33) என்பவர் வந்தார். அவர் போலீசாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியில் வசிக்கும் நானும், உறவினரான சீனிவாசன்(38) என்பவரும் கடந்த 2007ம் ஆண்டு காதலித்தோம். இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் வைத்து, என்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட அவர், கிருஷ்ணகிரி பவர் ஹவுஸ் காலனியில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்தார். இதனிடையே, அவருக்கு 2010ம் ஆண்டு எஸ்.ஐ.,யாக வேலை கிடைத்து, பாலக்கோட்டில் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு நான் கர்ப்பிணி ஆனேன். அதன் பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சரிவர வீட்டுக்கு வரவில்லை. செல்போனிலும் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த நான், விசாரித்தபோது, பாலக்கோட்டில் வேலை பார்த்த போது, எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, என்னை அலட்சியம் செய்ததோடு, மிரட்டல் விடுத்தார். இதுபற்றி, தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த நான், கடந்த திங்கட்கிழமை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடமும் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் சீனிவாசன், தற்போது தர்மபுரி நகர் பி1 காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணி புரிந்து வருகிறார். எனவே, எனது புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆனால், அவர் வசிப்பது கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனி என்பதால், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி, பாலக்கோடு போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த சத்யா, அங்கிருந்து சீனிவாசனின் வீட்டுக்கு சென்றார். அங்கு எஸ்ஐ சீனிவாசன் இல்லை. வீட்டில் அவரது தந்தை முனுசாமி மற்றும் மனைவி மட்டுமே இருந்தனர். அவர்கள் சத்யா வந்ததும், வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். இதையடுத்து,தனக்கு நீதி கேட்டு எஸ்ஐ வீட்டு முன்பு சத்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் அங்கு வந்து,கிருஷ்ணகிரி போலீசில் சென்று புகார் அளிக்கும்படியும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவுறுத்தினார். இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்டு, சத்யா அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்றார். காதல் திருமணம் செய்து,கர்ப்பிணியாக்கி விட்டு கைவிட்டதாக போலீஸ் எஸ்ஐ மீது நிறைமாத கர்ப்பிணி புகார் அளித்துள்ள சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home ,SI Pregnant Darna , SI Pregnant ,Darna before home
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...