×

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு வீரரின் குடும்பத்திற்கு நீதிபதிகள் ரூ.3.15 லட்சம் வழங்கல்

கயத்தாறு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் நீதிபதிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ.3.15 லட்சம் நிதியுதவி வழங்கினர். ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி  சிஆர்பிஎப் வீரர்கள் பேருந்தின் மீது ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த வீரர் சுப்பிரமணியன், அரியலூர் சிவசந்திரன் உள்ளிட்ட 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேபோல் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட ஆணைகள் குழுவின் தலைவருமான சுரேஷ் விஸ்வநாத் தலைமையில் நேற்று வருகை தந்த நீதிபதிகள், ஆணைகள் குழு உறுப்பினர்கள், சுப்பிரமணியனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் ஆணைக்குழு சார்பில் ரூ.3.15 லட்சம் நிதியுதவியை மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் சுப்பிரமணியனின் நினைவிடத்திற்கு சென்ற நீதிபதிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிகளில் சட்ட பணிகள்  ஆணை குழுவின் செயலாளர் சாமுவேல் பெஞ்சமின்,  மாவட்ட உரிமையியல் நீதிபதிகள்  நிஷாந்தினி (கோவில்பட்டி) அசன் முகமது (தூத்துக்குடி), கோவில்பட்டி சார்பு  நீதிமன்ற நீதிபதி பாபுலால், நீதித்துறை நடுவர்கள் சங்கர், தாவூத்தம்மாள்,  அரசு வக்கீல் சந்திரசேகரன்,  வக்கீல்கள் ராமச்சந்திரன்,  முத்துக்குமார், கருப்பசாமி, நீதித்துறை ஊழியர்கள் சங்கத் தலைவர் உலகநாதன்,  துணைத்தலைவர் மணிமாறன், இணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், கோவில்பட்டி  சார்பு நீதிமன்ற சிரஸ்தார் மைக்கேல் கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ்,  கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார், நீதித்துறை ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ராணுவத்தில் பணி

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார். அன்னாரது புகழுக்கு நீதித்துறை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. சுப்பிரமணியன் மனைவி பட்டதாரி. கணவர் நாட்டுக்காக தன் உயிரை ஈந்துள்ளார். இவரும் ராணுவ அகாடமியில் பணியில் சேர்ந்து மேஜர் நிலைக்கு வரவேண்டும். இதுவே நீதித்துறையின் கோரிக்கை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judges ,Kayattharu ,attack ,Pulwama , Pulwama attack, kayatru, judges
× RELATED சென்னை, மதுரை உள்பட தமிழ்நாடு...