×

5,8ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பில் குளறுபடி தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19ம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அதிமுக அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அதிமுக அரசு செயல்படுத்துவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

மத்திய அரசு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பாஜக அரசே நினைத்துப் பார்க்காத அவசரத்தில், அதை அதிமுக அரசு பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக்கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து இருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. இந்த பொதுத் தேர்வுகள் பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவனின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைப்பதற்குச் சமம் என்பதை மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் உணரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

 “பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் அரசாணை வெளியிடவில்லை” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் கோபிச்செட்டி பாளையத்தில் ஏதும் அறியாதவரைப்போல பேட்டியளித்திருக்கிறார். இந்த அரசாங்கத்தில் என்னதான் நடக்கிறது? அரசாணை இல்லாமல் - அரசு பொதுத்தேர்வு குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்காமல் முதன்மை கல்வி அலுவலர்கள் எப்படி “பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று ஒரு சுற்றறிக்கை அனுப்ப முடியும்? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கோமாளித்தனமான அரசு” என்பதற்கும், அரசு என்ற போர்வையில் மனம்போன போக்கில் “துக்ளக்” தர்பார் நடத்துகிறார்கள் என்பதற்கும் இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் என்பது ஏதோ டெண்டரில் அதிமுக அமைச்சர்கள் கமிஷன் அடிப்பது போன்றது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். கல்வியாளர்களையும், பெற்றோர்களையும்- ஏன் மாணவர்களையும் கூட கலந்து ஆலோசித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரை வேக்காட்டுத்தனமாக - அவசர கோலத்தில் எடுப்பது பல தலைமுறைகளை பாதித்து விடும்.ஆகவே, மத்திய பாஜக அரசின் “காவிமய கல்வி” மற்றும் “சமூக நீதி” மற்றும் “கிராமப்புற மாணவர்களை” பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடி, கையைக் கட்டிக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு ஒத்துழைப்பதை அதிமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு, மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அதிமுக அரசு கைவிட வேண்டும் கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tughlaq Durbar ,MK Stalin ,Class General Announcement Announcement , 5,8th Class General Examination, Tamil Nadu, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...