×

அதிமுகவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

சென்னை: அதிமுகவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியில் பாமகவைவிட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக  நிபந்தனை விதித்ததால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  விஜயகாந்த்தை சந்திப்பது ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அதிமுக தரப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சுதீசுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தேமுதிக பிடிவாதமாக இருந்ததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, பாஜ தரப்பிலும் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டவர்களும் விஜயகாந்த்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச தேமுதிகவில் சுதீஷ், பார்த்தசாரதி,  அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு நேற்று காலையில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்த்தை இக்குழு சந்தித்துப் பேசியது. அதேநேரத்தில்,  தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய  ஆலோசனை நடத்தினர்.பாமகவை விட குறைந்த இடங்களே தருவதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே,  அதிமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்ற முடிவுக்கு விஜயகாந்த் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 30  நிமிடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அதன்பின்னர் நிருபர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது: விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று  சென்னை திரும்பியுள்ளார். நானும் சில நாட்கள் வெளிநாடு மற்றும், டெல்லி சென்றிருந்தேன். இப்போது சென்னை திரும்பியதால், அவரை சந்தித்து நலம்  விசாரித்தேன்.

அவர் மேலும் நலம் பெற்று முழு குணமடைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர். நானும் ஒரு அரசியல்வாதி.  அரசியல் தலைவர். நாங்கள் இரண்டு பேரும் சந்தித்து பேசும் போது அரசியல் பேசவில்லை என்று சொல்ல முடியாது. இது தேர்தல் நேரம். நாட்டு நடப்பு பற்றி  பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும். தேர்தல் நிவரம் பற்றி பேசினோம். கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள்  எப்படி ஆகிவிட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும்,. எனவே நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற அபிப்ராயத்தை அவரோடு  நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு மேல் பேச்சு வார்த்தை குறித்த விவரத்தை தெரிவிக்க முடியாது. பொறுத்திருந்து  பாருங்கள். நல்லது நடக்கும். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,meeting ,Tirunavukkarar ,Vijayakanthan , AIADMK, Vijayakanth, Thirunavukkarar, meeting
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...