×

ஆனந்த்சிங் மீது தாக்குதல் : காங். எம்எல்ஏ கணேசுக்கு 14 நாள் காவல்

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேசை (காம்ளி தொகுதி)ராம்நகர் நீதிமன்றம் 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.கர்நாடகத்தில் நடந்து வரும் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜ கட்சி ஆபரேஷன் தாமரையில் ஈடுபட்டது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜவிற்கு கட்சி தாவ திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இதை தடுக்க காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஜன.18ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. அப்போது அனைத்து எம்.எல்.ஏக்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பிப்.20ம் தேதி பெங்களூரு ஊரகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு அனைவருக்கும் மது விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆனந்த் சிங் மற்றும் ஜே.என் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். போதையில் இருவருக்கும் இடையே நடந்த தகராறில், கணேஷ் பீர் பாட்டிலால் ஆனந்த் சிங்கை தாக்கினார். இதில் ஆனந்த் சிங்கின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு நிலவியதை தொடர்ந்து, எம்.எல்.ஏக்கள் அவரை மீட்டு பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ராம்நகர் மாவட்ட பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜே.என் கணேஷை தேடி வந்தனர். இதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டது. ஐதராபாத், மும்பை, சென்னை, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களுக்கு தனிப்படையில் சென்றனர்.

ஆனால் ஜே.என் கணேஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜே.என் கணேஷ் குஜராத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தஞ்சம் அடைந்திருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராம்நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் உள்பட 17 பேர் 20ம் தேதி குஜராத் விரைந்து சென்று கணேஷ் தலைமறைவாக இருந்த ஓட்டலை சுற்றி வளைத்தனர். அங்கு அவரை கைது செய்த போலீசார் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூருவிற்கு அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பெங்களூருவிற்கு அழைத்து வரப்பட்ட அவரை, நேற்று காலையில் ராம்நகர் அழைத்துச் சென்றனர். அங்கு பிடதி போலீசார் அவரிடம் சுமார் 2 அரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தாக்குதல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த தகவலை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் ராம்நகர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். ரத்த மாதிரியை எடுத்த மருத்துவர்கள் பி.பி, சர்க்கரை வியாதி, இ.சி.ஜி உள்பட பல்வேறு சோதனைகள் செய்தனர்.இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட போலீசார் பின்னர் அவரை மதியம் 3 மணியளவில் ராம்நகர் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அனிதா முன்னிலையில் விவாதம் நடந்தது. இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி அனிதா, எம்.எல்.ஏ ஜே.என் கணேஷை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து ராம்நகர் போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து பெங்களூரு அழைத்து வந்தனர். இங்குள்ள  பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் போலீசார் அவரை அடைத்துள்ளனர். விசாரணை கைதிகளுக்கான அறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜே.என் கணேஷ் தரப்பு வக்கீல், ஜாமீன் கோரி இன்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை  ஜாமீன் கிடைத்தால் கணேஷ் விடுதலையாவதற்கான வாய்ப்பு உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA Ganesh , Congress MLA Anand Singh, Ganesh, 14-day police
× RELATED விடுதியில் சக எம்எல்ஏ ஆனந்த்சிங் மீது...