×

அப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அடுத்த அப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு கடந்த இரண்டு நாட்கள் முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு, கான்டூர் கால்வாய், அப்பர் ஆழியார், குரங்கு அருவி மற்றும் நீரோடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் விவசாயத்துக்கு மட்டுமின்றி, அப்பகுதிமக்கள் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.

 கடந்த ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை அவ்வப்போது பெய்த மழையால், அந்நேரத்தில் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
அதன்பின், எதிர்பார்த்த அளவில் மழை இல்லாமலும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் பொய்த்ததால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு, நாள் குறைய துவங்கியது.

 கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, ஆழியார் அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியாக இருந்துள்ளது. ஆனால், தற்போது மழையில்லாததால் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 58.80 அடியாக சரிந்துள்ளது. ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிவால், பெரும்பாலான பகுதி பாறை மற்றும் மணல் மேடுகளாக உள்ளது. மேலும், வரும் காலங்களில் பாசனத்துக்கும் குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

 இந்த சூழ்நிலையில், அப்பர் ஆழியார் அணையிலிருந்து ஆழியார் அணைக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் நவமலை நீரோடை வழியாக ஆழியார் அணையை வந்தடைகிறது. இந்த தண்ணீர் திறப்பு இன்னும் சில வாரத்திற்கு தொடர்ந்திருக்கும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Upper Aliyar ,Aliyar , Upper aliyaru, Monkey falls,water
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...