×

கூத்தாநல்லூர் அருகே ஓகை பேரையூர்யில் வெள்ளையாறு மூங்கில் பாலம் உடைந்தது

*  ஆற்றில் தத்தளித்த படி  செல்லும் மக்கள்

நீடாமங்கலம் : கூத்தாநல்லூர் அருகில் ஓகை பேரையூரில் வெள்ளையாற்றில்  மூங்கில் பாலம் உடைந்து  விழுந்ததால் மக்கள் ஆற்றில் இறங்கி செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதனால்  மூங்கில் பாலத்தை அகற்றி விட்டு  கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில்  உள்ளது. ஓகைபேரையூர் ஊராட்சி பகுதியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஓகை பேரையூருக்கும்  அண்ணா காலனிக்கும் இடையில் வெள்ளையாற்றில் இருந்த கம்பி பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உடைந்து 48 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்த செய்தி  தினகரனில் படத்துடன் வெளியானது. இதையடுத்து  மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் அருகில் வெள்ளையாற்றில் மூங்கில் பாலம் கட்டப்பட்டு அதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சென்று வந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த  சுமதி கூறுகையில்,  இங்கிருந்த கம்பி பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்ததில் 48பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.பிறகு எங்கள் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் மூங்கில் பாலம் அமைத்து கொடுத்தனர்.அதில் சென்று வந்து கொண்டிருந்தோம். தற்போது மூங்கில் பாலம் இடிந்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்ததால் ஆற்றில் இறங்கி செல்லும் அவலம் உள்ளது. விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த பாலத்தை உடனே கான்கிரீட் பாலமாக கட்டவேண்டும் என்றார்.

நாகராஜ கோட்டகம் மணிமாறன் கூறுகையில், இந்த பாலம் வழியாகதான் பூசங்குடி,மாயனூர்,களிமங்கலம் கமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் கமலாபுரத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று வருகிறோம். ஆனால் தற்போது மூங்கில் பாலம் உடைந்துள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது .ஓகைபேரையூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால்  10 கிமீ தூரம்   சு்ற்றி செல்லவேண்டியுள்ளது.என்றார்.

அன்புச்செல்வம் கூறுகையில், மூங்கில் பாலம் இடிந்ததை சம்மந்தப்பட்ட மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே உடனே கான்கிரீட் பாலத்தை கட்ட வேண்டும்.மூங்கில் பாலம் இடிந்ததால் மாணவர்கள் பொது மக்கள் பெரும் அவதி பட்டு வருகின்றனர். பூசங்குடி மாணவன் பிரதீப் கூறுகையில், கம்பி பாலம் இடிந்த பிறகு வெள்ளையாற்றில் தண்ணீரில் இறங்கி தத்தளித்த படி சட்டைகள் நனைந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றோம்.

பிறகு மூங்கில் பாலம் கட்டிய உடன் அதில் சென்று வந்தோம்.தற்போது அந்த பாலமும் இடிந்து விட்டதால் ஆற்றில் இறங்கி செல்லும்  போது கஜா புயலால் அடித்து வரப்பட்ட முள் சேற்றில் புதைந்து காலில் குத்தி மாணவர்கள் காயங்களுடன் செல்கின்றனர்.எனவே உடனே பாலத்தை கட்ட வேண்டும் என்றார். கம்பி பாலமும் இடிந்து மூங்கில் பாலமும் இடிந்து தற்போது ஆபத்தான நிலையில் தண்ணீரின் அடியில் கிடக்கும் முள் மீது நடந்து  காயங்களுடனும், ஆபத்தான நிலையில் பாலத்தில் ஏறி செல்லும்  மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்த  வெள்ளையாற்றிற்கு  வருவதற்குள் கான்கிரீட் பாலம் கட்ட ப்பட வேண்டும்  என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bamboo Bridge ,Koothanallur ,Okayai Peraiyur , Koothanallur,Needamangalam,Bamboo Bridge,School students
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா