×

முத்துப்பேட்டை அருகே தற்காலிக மரப்பாலத்தால் விவசாயிகள் அவதி

* நிரந்தர கான்கீரீட் பாலம் கட்ட வலியுறுத்தல்

முத்துப்பேட்டை :  முத்துப்பேட்டை  அருகே பழுதடைந்த தற்காலிக மரப்பாலத்திற்கு பதிலாக நிரந்த கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அயிரக்கண்ணி அருகே ஆலங்காடு மற்றும் கோவிலூர் விவசாய நிலமான சாகுபடி கோட்டகம் உள்ளது. இதில் ஆலங்காடு கோட்டகத்தில் சுமார் 120ஹெக்டேரும். கோவிலூர் கோட்டகத்தில் சுமார் 135 எக்டேரும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சாகுபடி கோட்டகத்திற்கும் அயிரக்கண்ணி பகுதிக்கும்  இடையில் கோவிலூர் வடிகால் பாசன வாய்க்கால் ஒன்று உள்ளது.

இதில் கிழக்கே கோரையாற்றிலும், மேற்கே பாமணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து பெற்று இந்த வாய்க்கால் மூலம் கிளை வாய்க்கால்கள் பிரிந்து இப்பகுதி விவசாய நிலங்களின்  பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைகிறது.  இதன் குறுக்கே தற்போது  தற்காலிக மரப்பாலம் ஒன்று உள்ளது. இது இப்பகுதி கோட்டகத்திற்கு செல்லும் விவசாயிகள் மற்றும் கோட்டகத்தை கடந்து செருப்பட்டாக்கரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த தற்காலிக மரப்பாலம் அன்று முதல் இன்று வரை அடிக்கடி உடைந்து சேதமடையும். அதனை அப்பகுதி மக்களே சரி செய்வார்கள்.

இதனால் இந்த தற்காலிக மரப்பாலத்தை அகற்றி விட்டு புதிய கான்கிரீட் சிமென்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் தற்போது அந்த மரப்பாலம் ஆங்காங்கே மரப்பலகை பெயர்ந்து விழுந்து விவசாயிகள் நடக்க முடியாத ஆபத்தான நிலையில் உள்ளது. சிலர்  அந்த பாலத்தில் செல்லும்போது தவறி பலகையின் இடையில் கால்களை விட்டு காயமடைகின்றனர்.
சிலர்  தற்பொழுது இடுப்பளவு தண்ணீரில் நீந்தியவாறு வாய்க்காலை கடந்து செல்கின்றனர்.

தண்ணீர்வரத்து அதிகமாக இருக்கும் நேரத்தில் அதுவும் செல்லமுடியாது.  அதே நேரத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் கொண்டு செல்லும் போது மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனால் அரசு இனியும் காலதாமதப் படுத்தாமல் இந்த தற்காலிக மரப்பாலத்தை அகற்றி விட்டு நிரந்தரமான சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும். அதற்கு முன் பழுதடைந்த இந்த மரப்பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woods ,Muthupet , Muthupet,wood Bridge,Farmers ,Concrete bridge
× RELATED முத்துப்பேட்டை அருகே...