×

கொண்டவீடு உற்சவத்தில் பங்கேற்ற முதல்வருக்காக பப்பாளி செடியை அழித்து ஹெலிபேட் தளம் அமைத்ததால் விவசாயி தற்கொலை

* குண்டூரில் பரபரப்பு

திருமலை : கொண்டவீடு உற்சவத்தில் பங்கேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்காக பப்பாளி செடியை அழித்து ஹெலிபேட் தளம் அமைத்த வேதனையில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொத்தபாளையம் மண்டலம், கொண்ட வீடு கிராமத்தில் கொண்ட வீடு உற்சவம் என்ற பெயரிலான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக வயல்வெளியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அப்போது கொண்ட வீடு கிராமத்தை சேர்ந்த விவசாயி கோட்டீஸ்வர ராவ் தனது தோட்டத்தில் பப்பாளி சாகுபடி செய்திருந்த நிலையில் அவரது அனுமதி இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு பப்பாளி செடிகளை அழித்து அதிகாரிகள் ஹெலிபேட் அமைத்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் செயலுக்கு விவசாயி கோட்டீஸ்வர ராவ் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் முதல்வர் சந்திரபாபுநாயுடு திருவிழாவில் பங்கேற்று திரும்பினார். இதையடுத்து அந்த நிலத்தில் விரக்தியுடன் அமர்ந்திருந்த விவசாயி கோட்டீஸ்வரராவ் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விவசாயி கோட்டீஸ்வர ராவை போலீசார் ஓட்டமும் நடையுமாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி கொண்டபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டீஸ்வரராவ் இறந்தார்.இந்த விவகாரம் தற்போது ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக விவசாய  பயிர்களை அழித்து ஒருவருடைய தற்கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரிகள், போலீசார்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண், பாஜவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

alignment=



ஆனால் அதிகாரிகள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் விவசாயி கோட்டீஸ்வரராவின்  அனுமதி பெற்றே அவரது நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதற்காக உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர்  இந்த விவகாரத்தை  தங்களது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினர்.

விவசாயி சாவில் சந்தேகம் அமைச்சர் பேட்டி

இதற்கிடையே வேளாண் துறை அமைச்சர் பத்திபாட்டி புல்லாராவ் தற்கொலை செய்துகொண்டு இறந்த விவசாயி கோட்டீஸ்வரராவின் வீட்டிற்கு நேற்று சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு சார்பில் ₹5 லட்சம் நிவாரணமாக வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயி கோட்டீஸ்வரராவுக்கு சொந்தமான நிலத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கவில்லை.

அவரிடம் உரிய அனுமதி பெற்று கட்டுப்பாட்டு அறை மட்டுமே அமைக்கப்பட்டது. வேறொரு இடத்தில் மட்டுமே ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுமென்றே இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கிறார். மேலும், கோட்டீஸ்வரராவின் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்து இறந்தது போல் தெரியவில்லை. கொலை செய்யப்பட்டதாகவே தெரிகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,plant ,Papaya ,ceremony , Farmers ,helipad ,Andra,papaya plant,sucide
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...