×

கண்ணீரில் மூழ்கியது விமான நிலையம்: மலேசியாவில் இருந்து வந்த 49 பேரை உறவினர்கள் சோகத்துடன் அழைத்து சென்றனர்: தமிழக அரசு மீட்டதாக பேட்டித் தந்த அமைச்சர் விரட்டியடிப்பு

சென்னை: மலேசியாவில் கொத்தடிமைகளாக வேலை செய்த 49 பேர் கனிமொழி எம்பியின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டு சென்னை வந்தனர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த 49 பேர், மலேசியாவில் உள்ள தெதாங்க் என்ற காட்டுப்பகுதியில் மின்சார கேபிள் பதிக்கும் வேலைக்காக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் தனியார் நிறுவனம் நல்ல சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றது. ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் கேபிள் பதிக்கும் பணி தரப்பட்டது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை, சரியான சாப்பாடு இல்லை. உட்கார்ந்தபடியே தூங்கவேண்டிய அவலநிலை இருந்தது. வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தங்களுக்கு வேலை வேண்டாம். நாங்கள் எங்கள் சொந்த நாட்டுக்கே செல்கிறோம் என்று கூறி தங்களுடைய பாஸ்போர்ட்டைக் கேட்டனர். 


ஆனால் ஒப்பந்ததாரர்கள் 2 வருட அக்ரி மென்ட்டில் வந்துள்ளீர்கள் உங்களை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்றனர். எனவே அவர்கள் தெதாங்க் என்ற காட்டுப் பகுதியில் இருந்து தப்பி பாட்டுக்கேஸ் என்ற இடத்திற்கு வந்து தஞ்சம் அடைந்தனர். அவர்களது பாஸ்போர்ட் தனியார் நிறுவனத்திடம் இருந்ததால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. மேலும் அவர்கள் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் மலேசியா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மலேசியா தமிழ்சங்கத்தினர் அவர்களுக்கு உதவி செய்தாலும் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்ப இயலவில்லை. இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, ஒரு திமுக கூட்டத்துக்கு சென்றிருந்தார். 


அப்போது தலைவன் கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் அவரிடம் ஒருமனு கொடுத்தனர். அதில் மலேசியாவில் தவிக்கும் 49 பேரின் அவல நிலை குறித்து விளக்கப்பட்டது. அதன்பேரில் கனிமொழி சுஸ்மா சுவராஜ்க்கு நிலைமையை விளக்கிக் கூறினார். சுஸ்மா சுவராஜ் மூலம் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறையில் இருந்த 49 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் எமர்ஜென்சி சர்ட்டிபிகேட் வழங்கி, இந்திய தூதரகமே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து 49 பேரையும் இந்தியாவுக்கு அனுப்பினர். அதன்படி நேற்று காலை 7.30 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாம்பூரில் இருந்து 49 பேரும் சென்னைக்கு வந்த ஏர்ஏசியா விமானத்தில் சென்னை வந்தனர். 49 பேரும் சென்னைக்கு வந்த தகவல் கிடைத்ததும் தலைவன் கோட்டையை சேர்ந்த அவர்களது உறவினர்கள் அவர்களை அழைத்துச் செல்ல மினி பஸ்ஸுடன் சென்னை விமான நிலையம் வந்தனர்.


மக்கள் கொந்தளிப்பு


இதற்கிடையில், 49 பேர் வரும் தகவல் கிடைத்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர்கள் மற்றும் நல ஆணையரகத்துறை அதிகாரிகளும் விமான நிலையம் வந்தனர். 49 பேரையும் அழைத்துச்செல்ல அவர்களும் வாகனத்துடன் வந்தனர். அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை வரவேற்று, தமிழக அரசு அவர்களை மீட்க பெரும் முயற்சி செய்ததாக பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது குறுக்கிட்ட மீட்கப்பட்டவர்கள், ‘‘நாங்கள் சிறையில் இருக்கும்போது எந்த ஒரு அதிகாரியும் எங்களை வந்து பார்க்கவில்லை. எங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலேசியா தமிழ் சங்கம் தான் எங்களை காப்பாற்றியது. எங்களை மீட்க திமுக எம்பி கடுமையான முயற்சிகள் எடுத்தார். 


ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசு எங்களை மீட்க நடவடிக்கை எடுத்ததாக  பொய்யான தகவலை தருவதாக குற்றச் சாட்டினர். மேலும் அதிகாரிகள் கொண்டுவந்த வாகனத்தில் செல்ல விரும்பவில்லை. என்று கூறிவிட்டு தலைவன் கோட்டையில் இருந்து உறவினர்கள் கொண்டுவந்த வாகனத்தில் ஏறிச் சென்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sisters ,relatives ,Malaysian , Tears, Airport, Malaysia, Relatives, Tamilnadu Government, Minister
× RELATED திருவாரூர் அருகே இளைஞர் வீலிங்...