பிரதமர் மோடி-சவுதி இளவரசர் கூட்டாக அறிவிப்பு: தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதல் அழுத்தம்: ரூ.7 லட்சம் கோடி முதலீடு

புதுடெல்லி: தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு, சாத்தியமான அனைத்து கூடுதல் அழுத்தமும் தரப்பட வேண்டும் என்பதை இந்தியாவும், சவுதி அரேபியாவும் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது முதல் பயணமாக பாகிஸ்தான் சென்ற அவர் கடந்த திங்கட்கிழமை, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லி வந்தார்.டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று சல்மானை கட்டித்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார். நேற்று காலை  பிரதமர் மோடி, இளவரசர் சல்மான் தலைமையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


 அப்போது, புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் இந்தியா தரப்பில் முன்வைக்கப்பட்டது. பின்னர் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:கடந்த வாரம் புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதல், உலகின் மீது மனிதத்தன்மையற்ற ஆபத்தின் நிழல் படர்ந்து கொண்டிருப்பதின் அடையாளமாகும். தீவிரவாதம் என்ற நோயை அழிக்க, அதற்கு ஆதரவு தரும் நாடுகளுக்கு இன்னும் அதிகமான அழுத்தம் தருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும் சவுதியும் ஏற்றுக் கொண்டுள்ளது.தீவிரவாத கட்டமைப்புகள் ஒழிக்கப்பட வேண்டும், தீவிரவாதத்திற்கு ஆதரவு தருவது தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தீவிரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் தண்டிக்கப்பட வேண்டியதும் முக்கியமானது.  இவ்வாறு அவர் கூறினார்.


சவுதி இளவரசர் சல்மான் விடுத்த அறிக்கையில், ‘‘இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தீவிரவாதமும், பயங்கரவாதமும் நமது பொதுவான கவலையாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கும் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். தீவிரவாதத்திற்கு எதிராக உளவுத் தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம்’ என்றார். முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சவுதி இளவரசர் சல்மானை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி-சல்மான் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியாவுக் கான ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக  சவுதி அரசு நேற்று உயர்த்தி யது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் சொன்னது என்ன?

புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கும் நிலையில் சவுதி இளவரசர் சல்மான், இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பது குறித்து சவுதியிடம் இந்தியா தெரிவித்தது. ஆனால், கூட்டறிக்கையில் புல்வாமா தாக்குதல் பற்றி சவுதி இளவரசர் எதையும் குறிப்பிடவில்லை. மேலும், புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா பல ஆண்டாக முயற்சித்து வருகிறது. இந்த விஷயத்தை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுடன் இணைந்து சவுதி இளவரசர் கூட்டறிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் முக்கிய பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாமாபாத்தில் சல்மான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராஜஸ்தானில் கதாகாலேட்சேபம்...