×

பெண் எஸ்.பி. பாலியல் புகார் விவகாரம் ஐ.ஜி., முருகன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் எஸ்.பி., கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீதான விசாரணையில்  தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி.,யாக பதவி வகித்துவரும் முருகன் மீது அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில், விசாகா கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதை எதிர்த்து ஐ.ஜி. முருகனும், அவரை வேறு பிரிவுக்கு  மாற்றக்கோரி பெண் எஸ்பியும் வழக்கு தொடர்ந்னர். இதற்கிடையே விசாகா கமிட்டி மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ஐ.ஜி. மீதான பாலியல் புகார் குறித்து டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரணை நடத்தி முடித்து 2 வாரத்துக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பாலியல் தொல்லையில் இருந்து பெண் அதிகாரிகள்,

ஊழியர்களை பாதுகாக்க அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்” என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி. முருகன், மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை விசாகா கமிட்டி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணை ஆகிய விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, ஐஜி முருகன் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்திகளை பத்திரிகைகள் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IG ,Murugan ,High Court ,interrogation , Female sb Sexual complaint, IG, Murugan, Investigation, Interim Banning
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...