×

ரிசார்ட்டில் சக எம்எல்ஏவை தாக்கிய சம்பவம் காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் குஜராத்தில் கைது

பெங்களூரு : கர்நாடக மாநிலம் ராம்நகர் தனியார் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்க் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கம்ளி தொகுதி எம்.எல்.ஏ கணேஷை தனிப்படை போலீசார் குஜராத்தில் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. இந்த ஆட்சியை கலைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜ  தீவிரம் காட்டி வரும் நிலையில், கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. இதற்காக பாஜ ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க தொடங்கினர். அப்போது காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்தவர்களை இழுக்க திட்டமிட்டு வந்தனர். ஆனால் மஜதவினர் ஆபரேஷன் தாமரைக்கு இடம் கொடுக்கவில்லை. காங்கிரசை சேர்ந்த 4 பேர் கட்சி தாவ முடிவு செய்வதாக  வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதற்காக அனைத்து எம்எல்ஏக்களை ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரையும்  அழைத்து கூட்டாக ஆலோசனை நடத்தியது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனித்து செயல்பட்டததாக தெரியவந்தது. அவர்களை தீவிரமாக கண்காணித்த காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவினர், அனைவரையும் அதே விடுதியில் தங்க வைத்தனர்.அப்போது ஆனந்த் சிங் மற்றும் கம்ளி தொகுதி எம்.எல்.ஏ  கணேஷ் உள்பட சிலர் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் அனைவருக்கும் மதுபானம் பரிமாறப்பட்டுள்ளது. அப்போது ஆனந்த் சிங் மற்றும்  கணேஷ் இருவரும் ஒரு மேஜையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இருவருக்கும் என்ன முன்விரோதம் இருந்தது என்று தெரியவில்லை.

சகஜமாக பேசி கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால்  கணேஷ் அடங்கவில்லை. மாறாக விடுதியில் இருந்த பீர் பாட்டீலை எடுத்து ஆனந்த் சிங்கை தாக்கினார். இதில் ஆனந்த்சிங்கின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் ஆனந்த் சிங்கை மீட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த ஆனந்த் சிங், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜே.என் கணேஷை தேடி வந்தனர். இதற்காக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்த ஜே.என் கணேஷ், ஒவ்வொரு மாநிலமாக சென்று தலைமறைவானார். குறிப்பாக சென்னை, ஐதராபாத், அந்தமான், மும்பை ஆகிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார். தனிப்படை போலீசார் அவர் சென்ற இடங்களையெல்லாம் மோப்பம் பிடித்து கைது செய்யும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜே.என் கணேஷ் குஜராத் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக ராம்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 3 சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேர் சிறப்பு விமானம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு சென்றனர். அம்மாநில போலீசாருக்கு இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அம்மாநில போலீசாரும், கர்நாடக போலீசாருக்கு வேண்டிய உதவிகள் செய்தனர்.

ஜே.என் கணேஷ் இருந்த இடத்தை முற்றுகையிட்ட போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, தப்பியோடுவதற்காக காரை ஓட்டி சென்றார். ஆனால் போலீசார் விடவில்லை. துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அங்கிருந்து பெங்களூரு அழைத்துவர திட்டமிட்ட போலீசார், முன்னதாக சட்டவிதிமுறைப்படி அவரை அம்மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு பாடிவாரண்ட் பெற்ற போலீசார் சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வரவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ராம்நகர் போலீசார் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. வருவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் உள்ளூர் முன்பு ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்றொரு புறம் ஜே.என் கணேஷ் தரப்பில் ஜாமீன் கோரி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நீதிபதியின் உத்தரவுதான் இறுதி தீர்ப்பு என்பதால், ஜாமீனா, அல்லது போலீஸ் காவலா என்பது பின்னர்தான் தெரியவரும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,Congress MLA Ganesh ,Gujarat ,resort , Congress MLA Ganesh , arrested, Gujarat for allegedly attacking, MLA in resort
× RELATED ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய...