×

இந்தியா வந்த சவுதி இளவரசருக்கு மரபுகளை மீறி வரவேற்பு அளித்தது ஏன் ?: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் காட்டம்

டெல்லி : இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை மரபுகளை மீறி நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்ற நிலையில், அதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இளவரசர் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா வர அனுமதி மறுப்பு

தெற்கு ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வர இருந்தார். ஆனால் புல்வாமா தாக்குதலை தொடர்நது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால்  பாகிஸ்தான் பயணத்தை முடித்து விட்டு நேரடியாக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி மறுத்தது. இதனால் இஸ்லாமாபாத்தில் இருந்து மீண்டும் ரியாத் சென்ற இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வருகை தந்தார்.

மரபுகளை மீறி பிரதமர் மோடி வரவேற்பு


ஒரு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை,  மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி இளவரசரை கட்டி அனைத்து வரவேற்றார். பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு பிரதிநிதியை வரவேற்க பிரதமர் நேரடியாக விமான நிலையம் செல்ல மாட்டாது. அதற்கு பதிலாக அமைச்சர்கள் விமான நிலையம் சென்று வெளிநாட்டு பிரதிநிதியை வரவேற்பர்.

காங்கிரஸ் காட்டம்


இந்நிலையில் இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை மரபுகளை மீறி நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்பு அளித்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பயங்கரவாததற்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுவதாக பாராட்டிய சவுதி இளவரசரை நேரில் வரவேற்று பாராட்டியது சரிதானா என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக கூறியவருடன் நட்பு பாராட்டுவது தான் புல்வாமாவில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வழியா என்று காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்பதை நிராகரிக்கும் வகையிலான கூட்டறிக்கையை பாகிஸ்தான் உடன் சேர்ந்து கொண்டு சவுதி வெளியிட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையை சவுதி திரும்பப் பெற மோடி அரசு நிர்பந்திக்குமா என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prince ,Saudi ,convention ,India , Congress, Khatam, Saudi Prince Mohammed bin Salman, Prime Minister Modi
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு