×

கெயில் திட்ட வழித்தடத்திலேயே அமைக்க முடிவு கோவை - பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு

ஈரோடு: கெயில்  எரிவாயு குழாய் திட்டத்தை போல தற்போது இருகூர்-தேவன்கொந்தி இடையேயான  எரிவாயு குழாய் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம்  கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை தமிழகத்தின் கோவை,  திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7  மாவட்டங்கள் வழியாக சுமார் 310 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதித்து  எரிவாயு கொண்டு செல்ல திட்டமிட்டது. இதற்காக எரிவாயு  குழாய்கள் விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்தது. இதற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அடுத்துள்ள இருகூரில் இருந்து பெங்களூரு தேவன்கொந்தி வரை  எரிகுழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் பாரத்  பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திட்டம்  செயல்படுத்துவது தொடர்பாக வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த  வரைபடத்தில் கெயில் நிறுவனம் எந்த வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல  திட்டமிட்டிருந்ததோ அதே வழித்தடத்தில் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலியம்  கார்ப்பரேசன் நிறுவனமும் முடிவு செய்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சி அடைய  செய்துள்ளது. இதுகுறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்  பொன்னையன் கூறியதாவது: கெயில் எரிவாயு  குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது கெயில்  திட்டத்தை போலவே புதியதாக கோவை அடுத்துள்ள இருகூரில் உள்ள பாரத்  பெட்ரோலியம் நிறுவனத்தின் பிளாண்ட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு  அடுத்துள்ள தேவன்கொந்தி என்ற இடத்திற்கு குழாய்கள் அமைத்து எரிபொருள்  கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த 2014ம் ஆண்டு  ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்ட போதிலும், தற்போதுதான் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த  வரைபடத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் பசுவபட்டி,  முருங்கத்தொழுவு, அனுமன்பள்ளி  வழியாக நாமக்கல் மாவட்டத்திற்குள் செல்கிறது. ஏறக்குறைய  இந்த வழித்தடமானது கெயில் நிறுவனம் அமைத்த வழித்தடம் போலவே உள்ளது. இத்திட்டம்  செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் குறியீடுகள் இடப்பட்டு வருகிறது.   இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள  இத்திட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே கைவிட வேண்டும். இவ்வாறு பொன்னையன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kail ,Bangalore , Kail project, Coimbatore, Bangalore, gas pipeline project, farmers
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...