×

செங்கத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்: மண்ணை வாரி இறைத்து பெண்கள் சாபம்

செங்கம்: சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்த 5ம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். பெண்கள் மண்ணை வாரி இறைத்து சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அளவீடு செய்து, குறியீடு கற்கள் பதிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்கனவே 4 கட்டங்களாக நடந்தது. தொடர்ந்து நேற்று 5ம் கட்ட கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. செங்கம் பிடிஓ அலுவலகத்தில், சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதையொட்டி, நேற்று மதியம் 12 மணியளவில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி, செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக கண்டன கோஷம் எழுப்பியபடி சென்றனர். பின்னர் கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் கூறுகையில், `நாங்கள் எழுத்து பூர்வமாக சில சந்தேகங்கள் மற்றும் குறைகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், அதிகாரிகள் அதற்குரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும், போலீசை வைத்து மிரட்டி பணிய வைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள் எங்களை சந்திக்கவில்லை. எனவே, கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்தோம் என்றனர். பின்னர், 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, விவசாய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மண்ணை வாரி தூவியபடி, சாபம் விட்டபடி சென்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protest meeting ,bridge , Farmers who ignored 8th, protest, anti-communal meetings
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்