×

பால் உற்பத்தியாளர்களை காப்பாற்ற முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும்: அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: பால் உற்பத்தி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாய தொழிலுக்கு துணை தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 25 லட்சம் குடும்பங்கள் கூட்டுறவு துறைக்கு நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறார்கள். நாள்தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 35 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களது இடுபொருளான மாட்டு தீவனம், கலப்பு தீவனம் 15 முதல் 20 சதவீதம் விலை ஏறி இருக்கிறது. இதற்கு ஈடாக பால் உற்பத்தியாளர்களுக்கு விலை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம், சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், ஒரு லிட்டர் பசும்பால் விலை ரூ10 ஆகவும், எருமைப்பால் லிட்டர் விலை ரூ16 ஆகவும் இந்த மாதத்திற்குள் உயர்த்த வேண்டும். இக்கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் அரசு அலுவலகத்தின் முன்னாலே பசுக்களை கட்டி வைத்து போராட்டம் நடத்துவோம் என்று பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் அறிவித்திருக்கிறார். இந்த விலை உயர்வை தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால், பால் உற்பத்தி தொழிலே அழிந்து விடுகிற அபாயகரமான நிலை இருக்கிறது. எனவே பால் உற்பத்தி தொழிலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தையும், ஆவின் நிறுவனத்தையும் அழைத்து தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mullappally ,KS Azhagiri , Milk production, tripartite talk, government, KS Azhagiri
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...