×

தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு: பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 2வது நாளாக இன்றும் தொடர்கிறது

சென்னை: பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டம் நாடு முழுவதும் நேற்று முதல் தொடங்கியது. இதனால், அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கியது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்கவேண்டும் உள்ளிட்ட பிரதான  கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நேற்று நடந்த முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல்  புறக்கணித்தனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான பி.எஸ்.என்.எல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல், தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் ஒரு சில அலுவலகங்களின் முன்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தையும் நடத்தினர்.  இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையில், கோரிக்கை மீது அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் கூட்டம் நடத்தி தீவிர  போராட்டத்தில் ஈடுபடபோவதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா கூறியதாவது: நேற்று தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் ஒன்றே முக்கால் லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோல், தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இன்று  இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. 4ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும். அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு இதுவரை  எந்த அழைப்பும் வரவில்லை. போராட்டத்தின் வாயிலாக சேவை மையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இவ்வாறு கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : participants ,PSNL ,Tamil Nadu , Tamilnadu, BSNL, BSNL Officials Strike, Strike
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு