×

சலவை, மண்பாண்டம், சவரத் தொழிலாளர்கள் மேம்பட 69% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்: இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்

சென்னை: சலவை, மண்பாண்டம், சவரத் தொழிலாளர்கள் மேம்பட 69 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாளர்) சங்கம் சார்பில் மாநில இளைஞர் அணி எழுச்சி மாநாடு சென்னை, புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.என்.பழனி தலைமை தாங்கினார். அமைப்பாளர் டி.கோவிந்தசாமி, செயலாளர் வி.தேவராஜ் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் குமரிஅனந்தன் சிறப்புரையாற்றினார். அரு.கோபாலன், இரா.கீதா, வசீகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது: கஜா புயலால் மண்பாண்ட தொழிலாளர்களின் மண் பொருட்கள் அனைத்தும் உடைந்தும், கரைந்தும் போயின. புயல் பாதித்து 3 மாதம் ஆகியும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் உரிய நிவாரண நிதி உதவிகள் முறையாக போய் சேரவில்லை.

அவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவியை வழங்க வேண்டும். இதுபோன்ற இயற்கை சீற்றத்தின்போது மண்பொருட்கள், உபகரணங்களையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு குடோன்களை ஆங்காங்கே கட்டித்தர வேண்டும். மண்சக்கரத்திற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்சக்கரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களுக்கு பதில் மண்பாத்திரங்களை பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும். சலவை, மண்பாண்டம், சவரத் தொழிலாளர்கள் மற்றும் அவரது தொழில்கள் மேம்பட 69 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் பி.ராஜகோபால் நன்றி கூறினார். முன்னதாக பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு பெண்கள் ஒன்று கூடி மோட்ச தீபம் ஏற்றி பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Youth Conference , Laundry, pottery, shaving workers, 69% reservation
× RELATED சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி...