×

பிக் பாஷ் டி20 லீக் தொடர் மெல்போர்ன் ரெனகேட்ஸ் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 லீக் தொடரில், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்போர்ன் டாக்லேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற ஸ்டார்ஸ் முதலில் பந்துவீசியது. ரெனகேட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. ஹாரிஸ் 12, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 13, ஹார்ப்பர் 6, கேமரான் ஒயிட் 12, ஹார்வி 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரெனகேட்ஸ் 10.2 ஓவரில் 65 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், டாம் கூப்பர் - டேனியல் கிறிஸ்டியன் ஜோடி அதிரடியாக 80 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கூப்பர் 43 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ்டியன் 38 ரன்னுடன் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பென் டங்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 93 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

ஸ்டாய்னிஸ் 39 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் டக் அவுட்டானார். டங்க் 57 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 1, மேடின்சன் 6, கோட்ச் 2, டுவைன் பிராவோ 3 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆடம் ஸம்பா 17 ரன், ஜாக்சன் பேர்டு 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரெனகேட்ஸ் பந்துவீச்சில் டிரமெய்ன், பாய்ஸ், கிறிஸ்டியன் தலா 2, ஹாரி கர்னி 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டமிழக்காமல் 38 ரன் விளாசியதுடன், 2 விக்கெட் மற்றும் 2 கேட்ச் என ஆல் ரவுண்டராக பங்களித்த கிறிஸ்டியன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2019 சீசன் பிக் பாஷ் கோப்பையை மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி முத்தமிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Big Bash D20 League ,Champion ,Melbourne Renegades , Big Bash T20 League, Melbourne Renegades,
× RELATED டெல்லி கேப்பிடல்சுக்கும் நெருக்கடி தொடர் தோல்வியை தவிர்க்குமா மும்பை?