×

பொக்ரானில் அதிநவீன ஆயுதங்களுடன் விமானப்படை போர் ஒத்திகை: அதிரடிக்கு தயார் என தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தர வேண்டுமென அனைவரும் கொந்தளித்து வரும் நிலையில், ராஜஸ்தானின் பொக்ரானில் விமானப்படையின் பிரமாண்ட போர் ஒத்திகை நடக்கிறது. ‘‘எந்த நேரத்திலும் நாங்கள் போருக்கு தயாராக உள்ளோம்’’ என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்தி இருக்கிறது.  நாடு முழுவதும் இந்த தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தகுந்த பதிலடி தர ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியும் அறிவித்துள்ளார். இதனால் எந்நேரமும் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் விமானப்படையின் போர் ஒத்திகை நடந்து வருகிறது. இன்றுடன் இந்த ஒத்திகை முடிவடைகிறது. ‘வாயு சக்தி’ என்ற பெயரில் நடக்கும் இப்போர் ஒத்திகை, விமானப்படையின் முழு பலத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. சீறிப்பாய்ந்த விமானங்கள் இலக்குகளை துல்லியமாக தகர்ந்து அழித்தன. இதில், சுகாய் 30, மிராக் 2000, ஜாக்குவார்ஸ், மிக்-29, தேஜஸ் ஆகிய விமானங்கள் விமானப்படையின் பலத்தை காட்டி வருகின்றன. அதிநவீன ஆயுதங்கள் இதில் பயன்படுத்தி பார்க்கப்படுகின்றன.மொத்தம் 137 விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.

காலை, மாலை, இரவு என வெவ்வேறு வேளைகளில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒத்திகையை ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி தனோவா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். ஒத்திகைக்கு பின் பேட்டி அளித்த விமானப்படை தளபதி தனோவா, ‘‘விரைவாக, வலுவாக, துல்லியமாக இலக்குகளை தகர்க்கும் எங்களின் தகுதியை வெளிக்காட்டி உள்ளோம். மரபுவழி போரில் நம்மை வீழ்த்த முடியாது என்பதை எதிரிகளும் அறிவார்கள். நமது தண்டிக்கும் தகுதி, படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் ஒத்திகை அமைந்துள்ளது. அரசியல் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அந்த உத்தரவு எப்போது கிடைத்தாலும் போருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றார். இந்த போர் ஒத்திகை ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிட்டிருந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்ததையடுத்து இந்த ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air Force War Rehearsal ,Pokhran , commander,announcement,Air Force,War Rehearsal, action,Pokhran,weapons
× RELATED பொக்ரானில் பீரங்கி பரிசோதனை