×

மார்த்தாண்டம் மேம்பால கீழ்ப்பகுதி சாலை நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணி

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.220 கோடி செலவில் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது உள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இரும்பு மற்றும் காங்கிரீட் கலந்த கலவையாக மார்த்தாண்டம் மேம்பாலம் உள்ளது. தற்போது வெள்ளோட்ட முறையில் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மேலும் பாலத்தின் கீழ்ப்பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதுபோல மேம்பாலத்தில் சிஎஸ்ஐ சர்ச் எதிர்புறம் கோதேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் சாலை அருகே 90 சுழல் படிக்கட்டுகளுடன் கூடிய பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நின்று செல்லும். ஆனால் களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் இருந்தும் மார்த்தாண்டம் வரும் வாகனங்கள் பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக இயங்க உள்ளதால், அந்த மார்க்கத்தில் இயங்கும் பஸ்களுக்கு மேம்பாலத்தில் பஸ் நிறுத்தம் இல்லை. மேம்பாலத்தில் இருந்து மார்க்கெட் சாலைக்கு காந்தி மைதானம் பகுதியில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. களியக்காவிளை மார்க்கத்தில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் மார்க்கெட் சாலைக்கு இறங்கி வரும் வகையிலும், மார்க்கெட் சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக நாகர்கோவில் மார்க்கம் வாகனங்கள் செல்லும் வகையிலும் இரண்டு தளங்களாக உள்ளன. ‘ஒய்’ வடிவிலான இந்த 2 தளங்களும் பின்னர் ஒன்றாக சேர்ந்து மார்க்கெட் சாலையில் முடிகின்றன.

இந்த நிலையில் காந்தி மைதானத்தில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக ஜல்லி வைத்து உறுதிப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் சாலை தார் அமைக்கும் பணி நிறையும் தருவாயில் உள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் தார் போட வேண்டியது உள்ளது. அதுபோல கீழ்ப்பகுதி சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மேடான நடைபாதைகளில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியும் தற்போது தொடங்கி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marthandam , Marthandam upmarket, road pavement, tiles
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு