×

பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு

பழநி: பழநி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் கால அரிய வகை நாணயங்கள் கிடைத்துள்ளன.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தனது வீட்டை சுத்தம் செய்த போது, சில பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை தொல்லியல் ஆர்வலர் கதிரவனிடம் காட்டியுள்ளார். பின்னர் அந்த நாணயங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் நந்திவர்மன், ராஜேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இந்த நாணயங்கள் குறித்து நந்திவர்மன் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்தவை. தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு பின் கிபி 985ம் ஆண்டு அருள்மொழி வர்மர் என்ற பெயருடன், அவர் ஆட்சி பொறுப்பேற்றார்.

ராணுவம், ஆட்சி அமைப்பு, இலக்கியம், நுண்கலை போன்றவை மிகப் பெரிய வளர்ச்சியடைந்ததால், தமிழக வரலாற்றின் பொற்காலம் என இவரது ஆட்சிக் காலம் வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுகிறது. கிபி 993ல் படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அந்த வெற்றியை நினைவுகூறும் வகையில் இந்த நாணயங்களை வெளியிட்டுள்ளார். 1.5 செமீ விட்டமும் 0.5 மிமீ தடிமனும் கொண்ட இந்த நாணயங்கள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒருபக்கத்தில் போர் வீரர்கள் வேலுடன் இருப்பது போலவும், மறுபக்கம் ராஜராஜ சோழனின் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை.இதே போல தங்க நாணயங்களும் அவரது காலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அவை இதுவரை கிடைக்கவில்லை. தங்க நாணயங்களை மக்கள் ஆபரணங்களுக்காக அழித்திருக்கலாம். வணிகத்திற்காக நாணயங்களை தமிழர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர் என்பது நாகரீகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palani , Ancient, ancient coins
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்