×

கட்டமைப்பு வசதி இல்லாத ரயில் நிலையம் பரிதவிக்கும் கோவை ரயில் பயணிகள்

கோவை : கோவை ரயில் நிலையத்தில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கோவை ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரம் உள்ளது. கோவை வழியாக தினமும் 80க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோவை வழியாகவே கேரளா செல்லும் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவாக்கம் செய்ய, கூடுதல் ரயில் தண்டவாளம் அமைக்க போதுமான இடவசதி இல்லை. முதல் இரண்டு பிளாட்பாரங்களை, கேரளா சென்று வரும் ரயில்கள் அதிகளவு பயன்படுத்துகின்றன. இதர பிளாட்பாரங்களை ஈரோடு, சேலம், பாலக்காடு, நாகர்கோவில் செல்லும் பாசஞ்சர் ரயில்கள், சென்னை, பெங்களூர் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் பயன்படுத்தி வருகின்றன.

alignment=


 கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து, செல்கின்றனர். ஆனால், போதுமான அளவு இடவசதியின்றி ரயில் நிலையம் திணறுகிறது. இதனால் ரயில் பயணிகள் தவிக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து கோவைக்கு ரயில் வந்தால் ரயில் நிலையம் மற்றும் ஸ்டேட் பாங்க் ரோடு ஸ்தம்பித்து விடுகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், வாகனங்களுடன் ரயில் நிலைய சுற்றுப்பகுதி ரோட்டில் திணறுவது வாடிக்கையாகி விட்டது.

 கோவை ரயில் நிலையத்தில் இடநெருக்கடியை குறைக்க தென்னக ரயில்வே சார்பில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்) உள்ளது. இதை, ரயில்வே குடியிருப்பு அருகே மாற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
 இங்கு, ரயில்வே தபால் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த இடமில்லை.

alignment=


தபால் அலுவலகத்திற்கு வரும் மக்கள், வாகனங்களை நிறுத்த அருகேயுள்ள ‘பார்க்கிங்’ ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. அதனால், இங்கு தினமும் வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. ரயில் நிலையத்தின் பின்பகுதியில் பார்சல் சர்வீஸ் உள்ளது. இதை வாலாங்குளத்தின் கரை அருகேயுள்ள ரயில்வே காலியிடத்திற்கு மாற்றவேண்டும், அப்போதுதான், இடநெருக்கடி தீரும், சரக்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் இருக்காது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 கோவை ரயில் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் பயணிகள் படுத்து தூங்கும் வகையிலான தங்கும் கூடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கோவை ரயில் நிலைய வளாகத்தில் இரண்டு இடங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின் உள்ளது. இதை, மேலும் இரண்டு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுவும், கண்டுகொள்ளப்படவில்லை.

 இங்குள்ள டிக்கெட் கவுன்டர்களில் கூட்ட நெரிசல் நீடிக்கிறது. குறிப்பாக, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் கூடுதல் கவுன்டர்களை திறக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இப்படி ரயில் பயணிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விடுவதால், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் திணறி வருகின்றனர்.   

மேலும் ரயில்நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் கழிவுகளை அகற்றும் பணியில் தாமதம் நீடிக்கிறது. ரயில் பாதையை ஒட்டியுள்ள பிளாட்பாரத்தில் பயணிகள் மூக்கை பிடித்தபடியே நடந்துசெல்ல வேண்டியுள்ளது. 3, 4, 5-வது பிளாட்பாரத்தில் தண்டவாளத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இங்குள்ள 4 யார்டுகளில் சென்னை, பெங்களூர் செல்லும் ரயில்கள் ஒரு நாள் முழுவதும் நிறுத்திவைக்கப்படுகிறது. காத்திருக்கும் ரயில்களை போத்தனூருக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை.
 ரயில்வே கோச் சென்டரில் போதுமான இடவசதி கிடையாது. பெட்டிகளை பராமரிக்க, இன்ஜின் பழுது நீக்க காலதாமதம் நீடிக்கிறது.

வளைந்து, நெளிந்து செல்லும் ரயில் தண்டவாளத்தால் பெட்டிகள், இன்ஜின் மாற்றுவது சிக்கலாக இருக்கிறது. ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறு சிறு மேம்பாட்டு பணிகள் நடந்தபோதிலும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேறவில்லை.  கோவை ரயில் நிலைய பிளாட்பாரங்களில், 29 இடத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இதில், சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்வதாக கூறி, போர்வெல் தண்ணீர் சப்ளை செய்கின்றனர். இதனால், ரயில் பயணிகள் அவதியுறுகின்றனர். ஒட்டுமொத்தமாக, கோவை ரயில் நிலையத்தின் கட்டமைப்பையும், பயணிகள் தேவையையும் நிறைவேற்ற தென்னக ரயில்வே நிர்வாகம் தயாராக இல்லை.

alignment=


இது, கோவை ரயில் பயணிகளுக்கு பெருத்த அடியாக உள்ளது. வருவாயை பெருக்கும் கோவை ரயில் நிலையம் அதற்கு ஏற்றாற்போல் பயணிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பது கோவை ரயில் பயணிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.   இதுபற்றி கோவை ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘’கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் நலனை கருத்தில்கொண்டு எஸ்கலேட்டர் அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் விரைவில் தயாராகி விடும். இதன்மூலம், வாகன நெரிசல் குறையும். கூட்செட் ரோட்டில் கார்கள் நிறுத்த ேதவையான இடவசதி செய்து தரப்பட்டுள்ளது. பயணிகளுக்கான அடிப்படை வசதிகைள நிறைவேற்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

  கோவை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல்அகமது கூறுகையில், ‘‘கூட்செட் ரோடு பகுதியில் ரயில் நிலையத்திற்குள் வாகனங்கள் சென்று வர தனி பாதை அமைக்கவேண்டும். ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை பிளாட்பாரம் பகுதிக்கு மாற்ற வேண்டும். அதிக ரயில்களை நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் பயன்படுத்த சாய்தள பாதை (ரேம்ப்) அமைக்கவேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore Railway Station , Building Facility ,Coimbatore ,railway station,passengers
× RELATED கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகம்