×

முத்துப்பேட்டை அருகே அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள பழமையான மரங்கள் வெட்டி கடத்தல்

* அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை :முத்துப்பேட்டை அருகே அறநிலையத்துறை பராமரிப்பில் உயிருடன் தழைத்திருந்த பழமையான  மரங்கள் பல துண்டாடப்பட்டு கடத்தப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முத்துப்பேட்டை அடுத்த  தில்லைவிளாகம், இடும்பாவனம், கற்பகநாதர்குளம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள், தென்னந்தோப்புகள் ஏராளமாக உள்ளன. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாய் வருவாயும் வந்தவாறு உள்ளது.

ஆனாலும் தோப்புகள் உள்ளிட்ட பலவும் தனியார் சிலரது ஆக்கிரமிப்பில் வீட்டு மனைகளாக மாற்றம் கண்டு வருகிறது.இதையடுத்து தென்னந்தோப்புகள் சிலவற்றில் உயரதிகாரிகளின் உத்தரவின்படி அறிவிப்பு போர்டுகளும் நடப்பட்டன. இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது. இதை ஆக்கிரமிப்போர் அத்துமீறி பிரவேசிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு போர்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும்  ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தவாறு உள்ளது.

இந்நிலையில் கோயில் தோப்புகளில் கஜா புயலின்போது  வேருடன் சாய்ந்த மரங்களை வெட்ட டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தில்லைவிளாகம் துரைதோப்பு பகுதியில் உள்ள கோயில் தோப்பில் சாய்ந்த மரங்களோடு மரங்களாக  உயிர்மரங்கள் டெண்டர் எடுத்தவர்களால் பல துண்டாடப்பட்டுள்ளது. இதில் சில மரங்கள் சுமார்50ஆண்டுகள் பழமையான மரமாகும். உயிர்மரங்கள் வெட்டி துண்டாடுவது  குறித்து அறிந்த பொதுமக்கள் மரம் வெட்டுவதை சில தினங்களுக்கு முன்பு தடுத்து அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் வெட்டிக்கிடந்த மரங்களை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். ஆனால் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

 இதனால் வெட்டி கிடக்கும் மரங்களும் நாளடைவில் மாயமாக வாய்ப்புகள் உள்ளது. அதனால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..  இதுகுறித்து திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுத்துரை  கூறுகையில்:   வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக உயிர் மரக்கன்றுகளும் நடப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் கோயில் தோப்புகள் மரங்கள் ஏதுமின்றி குடியிருப்புகளாக மாறிவிடும் என்றார்.

இதுகுறித்து செயல் அலுவலர்  ஜவகர் கூறுகையில், தில்லைவிளாகம் பகுதியில் வேருடன் சாய்ந்த மரங்களை மட்டுமே வெட்ட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் உயிர்மரங்கள் வெட்டபட்டது அறிந்து போலீசாரிடம் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என  இயற்க்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : caretaker department ,Muthupettai , smuggle,government ,muthupettai,Trees
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...