×

பள்ளிபாளையத்தில் போராட்ட பந்தலை அகற்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது: வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பலவந்தமாக  கைது செய்த போலீசார், போராட்ட பந்தலையும் அகற்றினர். இந்த அடக்குமுறையை கண்டித்து, விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஐந்துபனை பகுதியில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2வது நாளாக போராட்டம் நீடித்தது.  இதனிடையே, நேற்று காலை அங்கு வந்த பள்ளிபாளையம் போலீசார், அவர்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், இது  பட்டா நிலம் என்று தெரிவித்தனர். மேலும், போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவு நகலையும் காண்பித்தனர்.

 ஆனால், இதை ஏற்காத போலீசார், விவசாயிகள் செல்லமுத்து, அருள், மோகன், பழனியம்மாள், மல்லியம்மாள் ஆகியோரை வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். மேலும், போராட்ட பந்தலும்  அகற்றப்பட்டது. இது காவல்துறையின் அராஜகம் என தெரிவித்த போராட்ட குழு தலைவர் படைவீடு பெருமாள், திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு மேலும் சில விவசாயிகள் வந்தனர். அவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து படைவீடு பெருமாள் கூறுகையில், யாருக்கும் இடையூறு இல்லாமல் சொந்த நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், விவசாயிகளின் அனுமதியே இல்லாமல், காவல்துறை பாதுகாப்போடு அவர்களின் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது ஜனநாயக விரோதம். அமைதியான வழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் தங்கமணி எங்கே, எப்போது பேச்சுவார்த்தை என தெரிவித்தால், அதில் கட்டாயம் நாங்கள் பங்கேற்போம். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : waiter ,Pillaypalayam ,Tarna , Pillapalayam, struggle, arrest
× RELATED புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல்...