×

சென்னையில் 2 நாள் சர்வதேச எண்டோஸ்கோபி சிகிச்சை கருத்தரங்கு

சென்னை: சென்னையில் நேற்று தொடங்கிய 2 நாள் சர்வதேச எண்டோஸ்கோபி சிகிச்சை கருத்தரங்கில் எண்டோஸ்கோபி சிகிச்சை தொடர்பான பல்ேவறு தலைப்புகளில் டாக்டர்கள் விவாதித்தனர். எண்டோஸ்கோபி சிகிச்சை தொடர்பான 2 நாள் சர்வதேச கருத்தரங்கு ‘‘ஈவ் எண்டோஸ்கோபி 2019’’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்தியன் அசோசியேசன் ஆப் கைனகாலஜிக்கல் எண்டோஸ்கோபிஸ்ட்ஸ் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன் துவக்கவிழாவில் கருத்தரங்கு தலைவர் ரேகா குரியன் வரவேற்றார். டாக்டர்கள் ஜெய்ஸ்ரீ கஜராஜ், சாவித்திரி  சுப்ரமணியம், கிருஷ்ணகுமார், லண்டனை சேர்ந்த பிரபல எண்டோஸ்கோபிஸ்ட் அட்யோலா ஒலடன் சிறப்புரையாற்றினர். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

இன்றைய இளம் டாக்டர்களிடையே ஒரு துறையில் நிபுணத்துவம் என்ற ஆர்வம் குறைவாக உள்ளது. உங்களை போன்ற சிறந்த திறமைமிக்க டாக்டர்களாக இளம் டாக்டர்களை உருவாக்க வேண்டும். இதுபோன்ற கருத்தரங்குகள் இளம் டாக்டர்களுக்கு, மூத்த டாக்டர்களின் அனுபவ பாடம் கிடைப்பதற்கு பாலமாக அமையும். தமிழகத்தில் நடைபெறும் 2,800 மகப்பேறு சிகிச்சைகளில் 2,000 சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, சுகாதாரத்துறையில் நாம் முன்னேறிய மாநிலமாக உள்ளோம். அதே நேரத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவிலேயே சுகாதாரத்துறை சேவைக்கு, அதிக இன்சூரன்ஸ் காப்பீடு உடைய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நேரம் காலம் பார்க்காமல் மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளும் நீங்கள் தான், தமிழகம், நாட்டின் பெருமை. 2030ம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி என்ற மத்திய அரசின் இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வரும் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் இதில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

ஒரு நோயின் பாதிப்பு அதிகரித்த பின்னரே ஒருவர் டாக்டரை தேடி வருகிறார். அதனால் நோய் வருவதற்கு முன்னதாக அதை தடுப்பதற்கான தடுப்பு மருத்துவம் மேற்கொள்வது, நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து முழுமையாக குணப்படுத்துவதை இலக்காக கொண்டு டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். கருத்தரங்கு செயலாளர் சுமனா மனோகர் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் ராமச்சந்திரா மருத்துவமனையில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்ைச மேற்கொள்வது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 300க்கும் அதிகமான இளம் டாக்டர்கள் மூத்த டாக்டர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து எண்டோஸ்கோபி சிகிச்சை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் டாக்டர்கள் விவாதித்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : endoscopy treatment seminar ,Chennai , Chennai. International Endoscopy Treatment
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...