×

மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க புதிய கருவி: இளம் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு.. தமிழக அரசு ஒத்துழைக்க கோரிக்கை

சென்னை: மழைக் காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க புதிய ‘மின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவி’யை தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சியாளர் ஹரிராம் சந்தர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து, எம்ஜிஆர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் ஹரிராம் சந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 18லிருந்து 20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதை தடுக்க ‘மின்சார விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவி’யை கண்டுபிடித்துள்ளேன். இந்த கருவியின் மூலம் மின்சார விபத்துகளை எளிதில் தடுக்கலாம். இந்த கருவி, மழை காலங்களிலோ அல்லது மற்ற சூழல்களிலோ மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்த உடனே மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டு விடும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் கம்பியை யார் மிதித்தாலும் ஷாக் அடிக்காது. அதேபோல் எந்த பகுதியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததோ அந்த பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு சர்வர் மூலம் தகவல் உடனடியாக சென்றுவிடும்.  இதேபோல், அதிகாரிகளுக்கும் அவர்களின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் உடனடியாக சென்று விடும். எனவே, மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் கம்பி அறுந்து விழுந்த இடத்திற்குச் சென்று பழுதை சரி செய்ய முடியும். உயிரிழப்பும் தவிர்க்கப்படும். வெளிநாடுகளில் கூட மின்சார விபத்துகளை தடுக்க எந்த கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சர்க்கியூட் பிரேக்கர் மற்றும் இதர பாகங்களை கொண்டு இதுபோன்ற கருவியை செய்தால் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், நான் செய்துள்ள இந்த கருவியின் பாகங்கள் 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை நான் 20க்கு அறிமுகம் செய்துள்ளேன்.  மின்துறை அமைச்சர் தங்கமணியை விரைவில் சந்திக்க உள்ளேன். தமிழக அரசு ஒத்துழைப்பு இருந்தால் தமிழகத்தில் இதை செயல்படுத்த முடியும். இவ்வாறு ஹரிராம் சந்தர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accidents ,season ,Tamil Nadu , Rainy days, accidents, young researcher, Tamil Nadu government
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...