×

புதுச்சேரி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல், அந்த மாநில துணைநிலை ஆளுநர் முடக்கிப்போட்டுள்ளார். பல ஆயிரம் கோப்புகள் ஆளுநர் அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் மக்கள் நலக் காரியங்கள் அனைத்தும் ஆளுநரால் தடுக்கப்பட்டிருக்கிறது. மாநில முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

நான்காவது நாளாக தொடரும் தர்ணா போராட்டத்தை, துணைநிலை ஆளுநர் அலட்சியப்படுத்தி விட்டு டெல்லி சென்று விட்டார். காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணைநிலை ஆளுநர், மக்கள் அரசு என்பதை அதிகார வர்க்கத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கருதுவதும், துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்துவதும் , அடக்குமுறை நடிவடிக்கைகளில் ஈடுபடுவதும் கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாஜகவின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது இந்த நிலையில் புதுச்சேரி மாநில உரிமைகளை மறுத்து, அரசின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் திருப்பப்பெற்று, புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகள் அரசும், ஜனநாயக நடைமுறைகளும் செயல்பட வழிகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,governor ,Muthrasan , Puducherry Governor,Emphasis on Muthrasan
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை