×

சிறு வயதில் குற்றம் செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப்படக் கூடாது

சென்னை: சிறு வயதில் குற்றம் செய்தவர்களுக்கு பணி உரிமை மறுக்கப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 2003ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த உடல் தேர்வு மற்றும் மருத்துவ சோதனையிலும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பது குறித்த போலீஸ் விசாரணையில் முருகன் பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் தேர்வு எழுதும்போது அவரது காலுக்கடியில் பிட் பேப்பர் கிடந்ததால் அந்த பாடத்திற்கான முடிவு ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு இரண்டாம் நிலை காவலர் பணி வழங்க முடியாது என்று 2004 ஜனவரியில் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து முருகன், உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, மனுதாரர் பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்து மாட்டியபோது அவருக்கு வயது 17தான். சிறார் நீதி (பாதுகாப்பு சட்டம்) சட்டப் பிரிவு 19ல் சிறு வயதில் குற்றம் செய்தவர்களுக்கு பணி வாய்ப்பு, சிவில் உரிமைகள் மறுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு பணி வழங்க முடியாது என்ற டிஜிபியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் வாதிடும்போது, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சார்பு பணிகள் விதி 14(பி)ன்படி முன் குற்றங்கள் இருந்தால் பணி நியமனம் பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றங்கள் நிலுவையில் இருந்தாலோ, இரண்டு மனைவிகள் இருந்தாலோ, செய்த குற்றத்திற்கு சந்தேகத்தின் பலனில் விடுதலை பெற்றிருந்தாலோ பணி நியமனம் வழங்க முடியாது. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பணி நியமனம் மறுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டுள்ளார். இந்த நீதிமன்றம் கடந்த 2015 பிப்ரவரி 27ல் சதீஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், சிறார் நீதி சட்டத்தின்படி அவருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதை ரத்து செய்துள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த காலு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ‘‘சிறார் குற்றவாளிகளை சிறார் நீதி சட்டம் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மறு வாழ்வுக்கான சூழலை உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் தேர்வில் காப்பி அடித்த நேரத்தில் அவரது வயது 18க்கும் குறைவு. அந்த குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. மாறாக சம்மந்தப்பட்ட பாடத் தேர்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீது எந்த கிரிமினல் குற்றமும் இல்லை. எனவே, அவர் 2ம் நிலை காவலர் பணிக்கு தகுதி இல்லை என்று கருத முடியாது. எனவே, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சார்பு பணிகள் விதியின்கீழ் அவருக்கு பணி வழங்க மறுத்த டிஜிபியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மனுதாரரின் தற்போதைய உடல் தகுதி, இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து அவருக்கு பணி வழங்க வேண்டும். மனுதாரர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து மட்டுமே பணிப்பலன்களை கோர முடியும். இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : who have been charged ,young age right , employment should not be denied
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...