×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி பதாகை ஏந்தி நின்ற மணமக்கள்: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்: ராஜீவ் கொலையில் சிறையில் உள்ள 7 பேரை, விடுதலை செய்யக் கோரி மணமக்கள், மணமேடையில் பதாகை ஏந்தி நின்றதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, பல தரப்பிலும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி பதாகையை ஏந்தி நின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த மணிவண்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்தவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வினோதினிக்கும் நேற்று திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

ராஜீவ் கொலையில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி, திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் பதாகையை ஏந்திப் பிடித்து, மணமேடையில் நின்றனர். 7 பேரின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இத்திருமணத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மணமக்கள் கூறுகையில், ‘‘7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை மீட்க இந்நாளில் இக்கோரிக்கையை வலியுறுத்தினோம்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BRUSSELS ,BANGALORE ,The Dindigul ,Rajiv ,jail ,release , Rajiv killing, demanding the release of 7 persons, banner and bride
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!