×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் : அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை : சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள்  சென்ற வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. ராமதாஸ் (பாமக நிறுவனர்): பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரச்சாவு அடைந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட வீரர்களுக்கு பாமக சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கும், இந்திய மக்களவைக்கும் விரைவில் தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில்தான் பாகிஸ்தான் ஆதரவுடன் அந்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்.

ஜி.ேக.வாசன் (தமாகா தலைவர்): இதுபோன்ற எந்த ஒரு தாக்குதல் சம்பவமும்  இனிமேல் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் நடைபெறக்கூடாது என்பதற்காக மத்திய,  மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  தீவிரவாதமும், பயங்கரவாதமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவை. தீவிரவாதம்,  பயங்கரவாதம் ஆகியவற்றை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய  அரசு ஈடுபட வேண்டும். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கிற தமிழக வீரர்கள் சுப்ரமணியன்,  சிவச்சந்திரன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும்,  உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த  அனுதாபங்கள். சரத்குமார் (சமக தலைவர்): கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்று ராணுவ அமைச்சர் சொல்லிவந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதங்களை இரும்பு கரம் கொண்டு அழிக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. புல்வாமா தாக்குதலுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்யும் அதேவேளையில், தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அகில சமக சார்பில் அஞ்சலியையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.கே.பைஜி (எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர்): பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உறவுகளை இழந்து சோகத்தில் சிக்கி இருக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர இந்திய ராணுவம் தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு படையினர் உயிரிழப்பை சந்திக்கும் போதெல்லாம், பிரதமர்  மோடி வெறும் டிவீட் மூலம் இரங்கல் தெரிவிக்கிறார்; அல்லது தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வெற்று வார்த்தை ஜாலம் காட்டுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terrorists ,Kashmir ,party leaders ,Pakistan , Terrorists attack in Kashmir ,Pakistan, All party leaders are urging
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...