×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை கொண்டு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே  பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.    தமிழக உள்துறை செயலாளர் உத்தரவுப்படி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் கமிஷனர்களுக்கு  பாதுகாப்பு பலப்படுத்த அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை உட்பட 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடற்கரை பகுதிகளில் கப்பல் மற்றும் படகுகள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள்  மேற்பார்வையில் மாநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில்  அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம்  உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir ,terrorists , Kashmir, terrorists attack, Tamil Nadu, strong police protection
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!