×

18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்: பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: 4ஜி சேவையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தோடு தங்களுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை அளிக்காமல், மத்திய அரசாங்கம் ஒருதலைபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு அளிக்கும் சலுகைகளில் ஒன்றைகூட மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஆட்சியாளர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் விரைவில் 4ஜி சேவை வழங்கப்படும் என கூறினார். ஆனால், அவர் கூறி ஒரு வருடம் ஆகிறது. இதுவரை சேவை வழங்கப்படவில்லை.  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக தங்களுக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் கோடி சொத்துக்களை வாடகைக்கு விட மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. மேலும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்க திட்டம் தீட்டி வருகிறது.

மத்திய அரசு தங்களின் வருவாயை அதிகரிக்கவும் மக்களுக்கு தரமான சேவையை வழங்கவும் 4ஜி சேவையை வழங்க வேண்டும். எனவே, 4ஜி சேவையை வழங்கவும், மக்களுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடக் கோரியும் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதிலும்  ஒன்றே முக்கால் லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உடனடியாக 4ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்க வேண்டும். எங்களின் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.   இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nation strike strike ,PSLL ,staff members announcement , Strike strike, BSNL, officials, staff union
× RELATED பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்