×

மான்கொம்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போலீசார் சமூக வலைத்தளங்களில் வைரல்

களக்காடு: களக்காடு அருகே திருக்குறுங்குடி நம்பிக்கோவில் வனப்பகுதியில் போலீசார் மான் கொம்புகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் உள்ளது.

இக்கோவிலின் அருகே நம்பியாறு ஓடுகிறது. கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டமாக செல்வது வழக்கம். இதுதவிர தமிழ்மாதத்தில் கடைசி சனிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இக்கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் திருக்குறுங்குடி ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலங்களும் உள்ளன.

இதனால் மற்ற நாட்களில் ஜீயர் மடம் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் அனுமதியின்றி அப்பகுதிக்கு செல்ல முடியாது. இந்நிலையில் திருக்குறுங்குடி எஸ்.ஐ. மகேந்திரன் மற்றும் அவருடன் 3 போலீசார் அங்கு உள்ள அருவியில் குளித்து விட்டு மான் கொம்பை கையில் வைத்து கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் மீது மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் படத்தில் உள்ள எஸ்.ஐ மகேந்திரன், நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wildlife, forest, horn, police, social networks
× RELATED திருவெறும்பூரில் 30 சவரன் நகை கொள்ளை..!!