×

பி.ஏ.பி வாய்க்காலில் மிதந்து வந்த செத்த கோழிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி; விவசாயிகள் கவலை

திருப்பூர்: திருப்பூர்-அவினாசிப்பாளையம் பகுதியில் நேற்று பி.ஏ.பி வாய்காலில்  இறந்த கோழிகள் நூற்றுக் கணக்கில் வந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை பகுதியில் இருந்து பி.ஏ.பி வாய்க்கால் மூலம் 3வது மண்டல பாசனத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமூர்த்திமலை முதல் வெள்ளக்கோவில் வரை பி.ஏ.பி வாய்க்கால் தண்ணீர் சென்று வருகிறது. திருப்பூர் தாராபுரம் பிரதான ரோட்டில் அவினாசிப்பாளையம் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் நேற்று திடீரென இறந்த  பிராய்லர் கோழிகள் வரிசையாக வர துவங்கியது. இதை கண்ட பொதுமக்கள்  மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கோபால் கூறுகையில், பி.ஏ.பி வாய்க்கால் அருகில் உடுமலை முதல் வெள்ளகோவில் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளது. இத்தகைய, பண்ணையில் இறந்த கோழிகளை குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது நெருப்பு வைத்து எரித்து விட வேண்டும். அவ்வாறு செய்யாமல், கோழி பண்ணையின் உரிமையாளர்கள் திருட்டு தனமாக இரவு நேரங்களில் இறந்த கோழிகளை வாகனங்கள் மூலமாக வாய்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால்,  பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

பி.ஏ.பி வாய்க்காலில் 3வது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இறந்த கோழிகள் மிதப்பதால் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, பல முறை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை தக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பூசாரிப்பட்டி முதல் காங்கயம் வரை இரவு நேரங்களில் 4 வாகனங்களில் போலீஸ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PAP , Chickens, public, farmers
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...