×

ஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்!

ஹராரே: ஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி 23 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜிம்பாப்வே நாட்டில் விலை மதிப்புமிக்க பிளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் போன்றவை அதிகளவில் உள்ளன. இதனால் அவற்றை எடுப்பதற்காக சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்து வந்துள்ளன. இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று கடந்த 12ம் தேதி இரவு திடீரென உடைந்தது.

அதிலிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தது. இந்நிலையில், வெள்ளநீரில் 23 பேர் சிக்கியுள்ளனர் என சக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து பேசிய சுரங்கம் ஒன்றின் செய்தி தொடர்பு அதிகாரி வில்சன், இந்த சுரங்கங்களில் ஒன்று எங்களுடையது. இது நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் மனிதநேய அடிப்படையில் நாங்கள் உதவி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gold mine ,breakdown ,Zimbabwe , Zimbabwe, dam, gold mine, flooding, death
× RELATED இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடர் ஜூலை மாதம் தொடக்கம்!