×

‘உதய்’ திட்டத்தை செயல்படுத்தியதால் கடன், வட்டி அதிகரிப்பு: ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் ‘உதய்’ திட்டத்தை செயல்படுத்தியதால் தான் கடன் மற்றும் வட்டி அளவு அதிகரித்ததுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். பதிலுரையில் அவர் கூறியதாவது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள  திட்டங்களெல்லாம் தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு உதவக் கூடியவை. எந்த நடப்புத் திட்டங்களுக்கும் ஒதுக்கீடு குறைக்கவில்லை.  இந்த நிதிநிலைக் குறியீடுகளில், வருவாய்ப் பற்றாக்குறையையும், நிதிப் பற்றாக்குறையையும் குறைப்பதற்கு, நாம் பெறும் வரி வருவாயிலுள்ள வளர்ச்சியை அதிகமாக நம்பியிருக்கிறோம்.  அதாவது, 2019-2020 ஆம் ஆண்டில், நாம் நிகரக் கடன் பெறுவதற்கு, 51,800 கோடி வரை பெற அனுமதித்திருந்த போதிலும், பெறக்கூடிய கடன், 43,000 கோடி அளவாகவே இருக்கும் என நாம் கணித்திருக்கிறோம்.  வரவு செலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, வருவாய்ப் பற்றாக்குறை 5,000 கோடி அளவு குறைத்துள்ளோம்.  நிதிப் பற்றாக்குறையை 2.56 சதவீதமாகக் குறைத்துள்ளோம்.  2019-2020 ஆம் ஆண்டில் பெறக்கூடிய கடன் அளவை அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து 8,800 கோடி குறைத்து கடன் பெற முடிவு செய்துள்ளோம்.

2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் நிதிப் பகிர்வில், தமிழ்நாடு அதிக பலன்களைப் பெற்றுள்ளது. அதாவது,  2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை, 42,640 கோடியாக உயர்ந்தது.  மீண்டும் 2011-2012 முதல் 2015-2016 ஆம் ஆண்டு வரை நாம் பெற்ற மத்திய அரசின் வரிப் பகிர்வு 80,855 கோடி. ஆக, மத்திய அரசு, நாங்கள் ஆட்சியில் இருக்கின்றபொழுது குறைவான நிதிப் பகிர்வை அளித்துள்ளது.  இந்த ஆட்சியில் வருவாய் வளர்ச்சி குறைவாக இருந்ததற்கு இது ஒரு மிகப் பெரிய காரணம். வட்டிச் சுமை அதிகரித்துவிட்டதாக உறுப்பினர் தெரிவித்தனர்.  உதய் திட்டத்தைச் செயல்படுத்திய பின்னர்தான் இந்த வட்டி அளவு உயர்ந்துள்ளது. இதைப் படிப்படியாகக் குறைக்கும் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.கடன் அளவைப் பற்றி உறுப்பினர்கள் திரும்பத் திரும்ப பேசுகின்றனர். வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு பொருளாதாரத்தில் கடன் அளவு உயர்வது இயற்கையான ஒன்றுதான்.  கடன் அளவு ஒவ்வோராண்டும் உயர்ந்து வந்தாலும், மாநில அரசின் வரி வருவாயும், மாநில உற்பத்தி மதிப்பும் உயர்ந்து வருகிறது.

எனவே, கடனைத் திருப்பிச் செலுத்தும் மாநில அரசின் திறனும் உயர்ந்து வருகிறது.  நமக்கு அனுமதிக்கப்பட்ட அளவு 25 சதவீதம் என்பதால் கடன் அளவை மீறிவிட்டதாகக் கருதத் தேவையில்லை. தொழில் துறைக்கு இலக்கு 1.6 லட்சம் கோடி  என்றால், இதில் 2015 ஆம் ஆண்டின் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் மட்டுமே, இதுவரை தொழில் துறைக்கு பெறப்பட்டுள்ள முதலீடு 67,000 கோடி   இது தவிர, சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1.54 லட்சம் கோடி பெறப்பட உள்ளது. இவ்வாறு துணை  முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

துணை மானியக் கோரிக்கை
துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம்  17 ஆயிரத்து 714. 99 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான துணை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அது குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.
முன்னதாக ஓ,.பன்னீர் செல்வம் கூறியதாவது: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்ப அட்டை தாரர்களுக்கு  1000 வீதம் வழங்க 2019.11 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் நிலுவைக் கடன்களை பங்கு மூலதன உதவியாக மாற்ற 1562.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய திருத்தத்தின்படி ஓய்வதியம் வழங்க 1345.60 கோடி தேவைப்படுகிறது. தமிழ்நாடு மின்விசை நிதி அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு பங்கு மூலதனமாக 1200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். பின்னர் துணை மானியக் கோரிக்கை குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBS , Loan, interest, OBS
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி