×

சில தலைவர்களுக்கு அரசு விழா 6 பேருக்கு மணி மண்டபம்:

சென்னை: பல்வேறு தலைவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாகவும், பல தலைவர்களுக்கு மணி மண்டபமும் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறி இருப்பதாவது:
* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு, அவருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
* பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் 1 கோடி செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், நூலகமும் அமைக்கப்படும்.
* அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர் என பன்முகங்களை கொண்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் 1 கோடி செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும்,  நூலகமும் அமைக்கப்படும்.
* பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு திட்டம் தொடங்க காரணமாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு அவர் பிறந்த இடமான கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே நூலகமும் 1 கோடி செலவில் அமைக்கப்படும்.
* சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பணிபுரிந்து, ஆங்கிலேயே அரசால் `ராவ் பகதூர்’’ மற்றும் சர்’’ பட்டங்களையும் பெற்றவர் சர். ஏ.டி.பன்னீர்செல்வம். அவருக்கு திருச்சி மாவட்டத்தில் 50 லட்சம் செலவில் திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
* நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயகர். அவருக்கு ஜேடர்பாளையத்தில் 30 லட்சம் செலவில் குவிமாடத்துடன் திருவுருவ சிலை அமைக்கப்படும்.
* பூலித்தேவன் படையில் படைவீரனாகவும், படை தளபதியாகவும் இருந்த விடுதலை போராட்ட வீரரான ஒண்டிவீரன். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணி மண்டபத்தை 75 லட்சம் செலவில் புனரமைப்பதுடன், அந்த வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
* வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத் தளபதியாக விளங்கியவர் வீரன் சுந்தரலிங்கம். கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தை 75 லட்சம் செலவில் புனரமைப்பதுடன், ஒரு நூலகமும் அதிலேயே அமைக்கும்.
* முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டித்தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15ம் தேதி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
* பவானி ஆறு காவிரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன். அவரது நினைவை போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
* இந்திய விடுதலை போராட்ட வீரர்;  சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவை தலைவர் ம.பொ.சிவஞானம். சென்னை, தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானம் திருவுருவ சிலைக்கு பிறந்த நாளான ஜூன் 26 தேதி, அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
* தமிழகத்தில் சி.பா.ஆதித்தனார்சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப் பேரவையின் அவைத்தலைவராகவும், கூட்டுறவு துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27ம் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ceremony , Some of the heads of the state ceremony are:
× RELATED அரசு விழா, கட்சியினருடன் ஆலோசனை மத்திய...