×

மாறிப் பேசுவது யார்? ஸ்டாலின்-ஓபிஎஸ் மோதல்: பேரவையில் சுவாரஸ்யம்

சென்னை: சட்டப் பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின் இறுதியில்  நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துப் பேசினார்.
அப்போது திமுக ஆட்சி குறித்து பேசினார். அப்போது திமுக உறுப்பினர், ஆஸ்டின் சில புள்ளி விவரங்களை தெரிவித்தார். அதனால் அவையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: உறுப்பினர் ஆஸ்டின் கடந்த 1999ம் ஆண்டு  முதல் மாறி மாறி பேசுகிறார். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: அவர் மாறி, மாறிப் பேசவில்லை. மாறி மாறியப் பேசியது நீங்கள்தான்.

துணை முதல்வர்: மாற்றம் வேண்டும் என்பதற்காக மாறி மாறிப் பேசினேன். ஆனால் ஆஸ்டின் இங்கிருந்து  போனவர். அவர் மாறிப் பேசுவது எந்த நோக்கத்துக்காக.மு.க.ஸ்டாலின்: மாறிப் பேசியதுடன் இல்லாமல், இதே இடத்தில் மாற்றி ஓட்டுப் போட்டவர்கள் நீங்கள். துணை முதல்வர்: எந்த நோக்கத்துக்காக அந்த சம்பவம் நடந்தது என்பது மக்களுக்குத் தெரியும்.

இ-சேவை ‘மாயம்’
ஒரத்தநாடு ராமச்சந்திரன் (திமுக): ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இ-சேவை மையம்  கட்டப்பட்டுள்ளது. அது எதற்காக கட்டப்பட்டது. எந்த சேவைக்காக கட்டப்பட்டது  என்பது தெரியவில்லை. தற்போது அந்த சேவை மையம் மூடப்பட்டுள்ளது. முறையாக  அந்த சேவை மையத்தில் எந்தெந்த சேவை வழங்கப்படும். அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி: மத்திய அரசு நிதி உதவியுடன் இ-சேவை மையங்கள்  கட்டப்பட்டுள்ளன. அங்கு மின் கட்டணங்கள், கேபிள் கட்டணங்கள்  வசூலிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் இ-சேவை மையங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயன்படுத்தாத இடங்களில் இ-சேவை மையங்களை  பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இறப்பு சான்று சிக்கல்
பெருந்துறை தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (அதிமுக): மருத்துவமனையில் இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால், வீடுகளில் இயற்கையாக இறப்பவர்களை மயானங்களுக்கு கொண்டு சென்றால் இறப்பு சான்றிதழ்கள் கேட்கிறார்கள். இதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: இறப்பு சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கே.என்.நேரு (திமுக): வீடுகளில் இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் ஆர்.டி.ஓ.விடம் வாங்க வேண்டியுள்ளது. இதற்கு 10 நாட்கள் வரை ஆகிறது. எனவே, உடனடியாக இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு அரசு மரியாதை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110ம் விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளை  அடுத்து எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: திராவிட இயக்கத்திற்கு  வித்திட்ட சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்பட  வேண்டும். சென்னையின் பிரதான சாலையில் அவரது சிலையை அமைக்க வேண்டும்.   ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் நூல்களை அரசுடமையாக்க வேண்டும். நன்னூல்  எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த குகை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டும். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி: சென்னையில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் சிலைக்கு  ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு செய்யப்படுகிறது. ஐராவதம் மகாதேவன்  நூல்களை அரசுடமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin-OBS Showdown ,Conference , Stalin-OPS, Council
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு:ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்